tech news
சிம் கார்ட் PORT செய்வோருக்கு செக் வைத்த டிராய்
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய்-இன் புதிய விதிமுறைகள் இன்று முதல் இந்தியாவில் அமலுக்கு வந்துள்ளன. புது விதிமுறைகள் பயனர்கள் சிம் கார்டு மாற்றுவது, ஸ்வாப் செய்யும் போது ஏற்படும் மோசடிகளில் இருந்து தப்பிக்க உதவும்.
சிம் ஸ்வாப் மற்றும் எம்.என்.பி.
பயனர்கள் ஏற்கனவே பயன்படுத்தி வரும் சிம் கார்ட்-க்கு மாற்றாக புதிய சிம் கார்ட் வாங்குவது சிம் ஸ்வாப் என்று டிராய் கூறுகிறது. எம்.என்.எப். என்கிற மொபைல் நம்பர் போர்டபிலிட்டி மூலம் பயனர்கள் தங்களின் மொபைல் நம்பரை மாற்றாமல் மற்ற நெட்வொர்க்குகளுக்கு மாற வழிவகை செய்கிறது.
2009 ஆம் ஆண்டு மொபைல் நம்பர் போர்டபிலிட்டி விதிமுறைகள் இதுவரை 9 முறை மாற்றப்பட்டு இருக்கின்றன. புதிய விதிமுறைகளின் கீழ் சிம் ஸ்வாப் அல்லது சிம் மாற்றியமைத்த ஏழு நாட்களுக்குள் யுனிக் போர்ட்டிங் கோட் (UPC) வேண்டும் என்று விடுக்கப்படும் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு விடும்.
இவ்வாறு செய்யும் போது அங்கீகரிக்கப்படாத நபர்கள் புதிய சிம் கார்டை மோசடி வழிகளில் பெறுவது மற்றும் அவ்வாறு பெற்றவுடன் போர்ட்டிங் செய்வதையும் தடுக்க முயற்சிக்கும். புதிய விதிமுறைகள் சிம் கார்ட் ஸ்வாப் அல்லது சிம் மாற்றும் மோசடிகளில் இருந்து பயனர்களை பாதுகாக்கும்.
புதிய விதிகளின் கீழ் டெலிகாம் சேவை வழங்கும் நிறுவனங்கள், பயனர் சிம் ஸ்வாப் அல்லது சிம் மாற்றியமைத்த ஏழு நாட்களுக்குள் யு.பி.சி. கோட் வேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் பட்சத்தில் அவற்றை நிராகரிக்க வேண்டும். இதற்காக யு.பி.சி.-யை நிராகரிக்க புதிய அளவுகோல் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
அதன்படி யு.பி.சி. வழங்குவதற்கு முன் டெலிகாம் நிறுவனங்கள் பின்வரும் நிலைகளை சரிபார்ப்பது அவசியம் ஆகும்.
1 – பயனர் கடைசியாக போர்ட் செய்த தேதியை பார்க்க வேண்டும். ஒருவேளை எம்.என்.பி. செய்து 90 நாட்கள் முடியவில்லை எனில், அதற்கான கோரிக்கையை நிராகரிக்கலாம்.
2 – ஏற்கனவே அதே நம்பரில் இருந்து போர்ட்டிங் செய்வதற்கான கோரிக்கை நிலுவையில் இருந்தால், புதிய எம்.என்.பி. கோரிக்கையை நிராகரிக்கலாம்.
3 – ஏற்கனவே யு.பி.சி. வழங்கப்பட்டு அதற்கான வேலிடிட்டி இன்னும் நிறைவடையவில்லை எனில், அதற்கான கோரிக்கையை நிராகரிக்க முடியும்.
மேலே குறிப்பிட்டுள்ள நிலைகள் அனைத்தும் சரியாக இருக்கு் பட்சத்தில், டெலிகாம் நிறுவனங்கள் யு.பி.சி. வழங்க முடியாது. மேலும், பயனர்கள் யு.பி.சி. கோரி விடுத்த கோரிக்கைக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகுந்த விளக்கத்துடன் பதில் அளிக்க வேண்டும்.