மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் இன்று வழக்கமான ஒன்றாக மாறி விட்டன. ஒவ்வொரு ஆண்டும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களின் விற்பனை மெல்ல அதிகரித்து வருவதும், ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் இந்த பிரிவில் தொடர்ச்சியாக புதிய மாற்றங்களை அறிமுகம் செய்வதுமே இதற்கு சான்றாக உள்ளன. ஒவ்வொரு நிறுவனமும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய துவங்கிவிட்ட நிலையில், தற்போது நிறுவனங்கள் அதிலும் புதுமை படைக்க துவங்கிவிட்டன.
அந்த வரிசையில் தற்போது விவோ நிறுவனம் இணைந்து இருக்கிறது. கடந்த சில நாட்களாக விவோ தனது X Fold 5 ஸ்மார்ட்போன் மாடலுக்கான டீசர்களை வெளியிட்டு வருகிறது. இது அந்நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்யும் விவோ X Fold 3 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். புதிய விவோ X Fold 5 மாடல் 8T LTPO AMOLED மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே பயன்படுத்தும் என்பதை விவோ நிறுவன மேலாளர் ஹான் பாக்சியோ தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த ஸ்மார்ட்போன் அதிக ரெசல்யூஷன் மற்றும் அதிக PPI கொண்டிருக்கும் என்றும் அவர் உறுதிப்படுத்தி இருக்கிறார். புதிய விவோ X Fold 5 மாடல் -30 டிகிரி செல்ஷியஸிலும் வேலை செய்யும் வகையில் உருவாக்கப்பட்டு இருப்பதாக அவர் தற்போது தெரிவித்துள்ளார். இத்துடன் இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் IPX8 + IPX9 + IPX9 என மூன்றும் இணைந்த IPX5 தர மடிக்கக்கூடிய ஸ்கிரீன் கொண்டிருக்கிறது. ஸ்மார்ட்போன் சந்தையில் இத்தகைய ஸ்கிரீன் கொண்ட முதல் மாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி இந்த ஸ்மார்ட்போன் 6000mAh பேட்டரி, 90 வாட் வயர்டு சார்ஜிங், 30 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதிகளை கொண்டிருக்கும் என்றும் புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 50MP ஆட்டோஃபோக்கஸ் அல்ட்ரா வைடு கேமரா, 50MP பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா கொண்டிருக்கும் என்று கூறப்படுிறது.
புதிய விவோ X Fold 5 ஸ்மார்ட்போன் இம்மாத இறுதிக்குள் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில், இந்த ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படலாம்.