latest news
சுமார் 20 லட்சம் பயனர்கள் மாயம் – தொடர் துயரத்தில் வோடபோன் ஐடியா!
மத்திய தொலைதொடர்பு மற்றும் ஒழுங்குமுறை ஆணையம் டிராய் வெளியிட்டு இருக்கும் சமீபத்திய அறிக்கையில் வோடபோன் ஐடியா நிறுவனம் தொடர்ச்சியாக பயனர்களை இழந்து வருவது தெரியவந்துள்ளது. கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி வரையிலான தகவல்களின் படி வோடபோன் ஐடியா பயனர்களில் 20 லட்சத்து 1 ஆயிரத்து 388 பேர் சேவையில் இருந்து விலகியுள்ளனர். இதன் மூலம் தொடர்ச்சியாக 23 ஆவது மாதமும் வோடபோன் ஐடியா பயனர்கள் எண்ணிக்கை சரிந்து இருக்கிறது.
ஒட்டுமொத்தமாக இந்திய வயர்லெஸ் சந்தாதாரர்கள் எண்ணிக்கை ஜனவரி மாதம் 11 லட்சத்து 43 ஆயிரத்து 02 ஆக இருந்து வந்தது. பிப்ரவரி மாதம் இந்த எண்ணிக்கை 11 லட்சத்து 41 ஆயிரத்து 96 ஆக குறைந்துள்ளது. இது முந்தைய மாதத்தை விட 0.09 சதவீதம் குறைவு ஆகும். இதில் வோடபோன் ஐடியா நிறுவனம் 20.84 சதவீத பங்குகளை கொண்டிருக்கிறது. இந்த எண்ணிக்கை வயர்லெஸ் சந்தாதாரர்களை மட்டுமே குறிக்கும்.
சந்தையில் வோடபோன் ஐடியா ஆக்டிவ் வயர்லெஸ் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 87.55 சதவீதமாக இருக்கிறது. டெலிகாம் சந்தையில் பாரதி ஏர்டெல் நிறுவனம் ஆக்டிவ் வயர்லெஸ் சந்தாதாரர்கள் எண்ணிக்கையில் 99.25 சதவீத புள்ளிகளோடு முதலிடம் பிடித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் வோடபோன் ஐடியா ஆக்டிவ் வயர்லெஸ் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 0.79 சதவீதம் சரிவடைந்து இருக்கிறது.
வோடபோன் ஐடியா பயனர்கள் எண்ணிக்கை தொடர்ச்சியாக குறைந்து கொண்டே வருகிறது. ஏப்ரல் 2021 ஆம் ஆண்டு 28 கோடியே 19 லட்சத்து 02 ஆயிரத்து 927 என்று இருந்த பயனர்கள் எண்ணிக்கை கடந்த பிப்ரவரி மாதத்தில் 23 கோடியே 79 லட்சத்து 62 ஆயிரத்து 722 ஆக சரிவடைந்துள்ளது. இதன் மூலம் வோடபோன் ஐடியா தொடர்ச்சியாக தனது பயனர்களை இழந்து வருவது அம்பலமாகி இருக்கிறது.
பீகார், மகாராஷ்டிரா, கோவா, உத்திர பிரதேசம் கிழக்கு, குஜராத் மற்றும் மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் வோடபோன் ஐடியா பயனர்கள் அதிகளவில் வெளியேறியுள்ளனர். ஒட்டுமொத்தமாக வயர்லெஸ் சந்தாதாரர்கள் எண்ணிக்கை குறைவதோடு, ஊரக பகுதிகளிலும் வயர்லெஸ் சந்தாதாரர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதன்படி பிப்ரவரி 2023 வரையிலான நிலவரப்படி மொத்தமாக ஊரக சந்தாதாரர்கள் எண்ணிக்கை 11 கோடியே 61 லட்சத்து 99 ஆயிரத்து 84 ஆக உள்ளது.
ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்கள் சந்தையில் 5ஜி வெளியீட்டில் தொடர்ந்து அதிக கவனம் செலுத்தி வருகின்றன. எனினும், வோடபோன் ஐடியா நிறுவனம் இதுபற்றி எந்த தகவலும் வழங்கவில்லை. இதன் காரணமாக வோடபோன் ஐடியா நிறுவனம் மேலும் சிக்கலான சூழலில் தவித்து வருகிறது.
இது போன்று தொடர்ச்சியாக வயர்லெஸ் சந்தாதாரர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதன் மூலம் கிட்டத்தட்ட கடந்த இரண்டு ஆண்டுகளாக வோடபோன் ஐடியா நிறுவன பயனர்கள் எண்ணிக்கை சரிந்து வருகிறது.