tech news
X தளத்தில் 2 லட்சம் அக்கவுண்ட்கள்.. தட்டித்தூக்கிய எலான் மஸ்க்.. ஏன் தெரியுமா?
எலான் மஸ்க்-இன் எக்ஸ் (முன்பு டுவிட்டர்) வலைதளம் கடந்த ஏப்ரல் 26 முதல் மே 25 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் இந்தியாவில் 2 லட்சத்து 30 ஆயிரத்து 982 அக்கவுண்ட்களை தடை செய்துள்ளது. இந்திய ஐ.டி. விதிகள் 2021 ஆம் ஆண்டின் கீழ் எக்ஸ் நிறுவனம் சார்பில் ஒரு மாத காலத்தில் எக்ஸ் தளத்தில் இருந்து நீக்கப்பட்ட அக்கவுண்ட்களின் விவரங்கள் வெளியிடப்பட்டு இருக்கிறது.
கடந்த மாதம் தடை செய்யப்பட்ட அக்கவுண்ட்களில் கிட்டத்தட்ட 2 லட்சத்து 29 ஆயிரத்து 925 அக்கவுண்ட்கள் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்களை ஊக்குவித்தது மற்றும் ஒருவர் சுயநினைவில் இல்லாத போது ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டதாக எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதோடு தீவிரவாதத்தை விளம்பரப்படுத்திய 967 அக்கவுண்ட்கள் தடை செய்யப்பட்டுள்ளன. மொத்தத்தில் இந்திய பயனர்களிடம் இருந்து 17,580 குற்றச்சாட்டுகள் எக்ஸ் தளத்திற்கு விடுக்கப்பட்டுள்ளது. அக்கவுண்ட்களை இடைநீக்கம் செய்ய 76 குற்றச்சாட்டுகள் எக்ஸ் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
சமீபத்தில் எக்ஸ் தளத்தில் ஆபாச சித்தரிப்புகள் யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் பதிவிட அனுமதி வழங்க முடிவு செய்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்து இருந்தது. எனினும், சட்டவிரோதமான ஆபாச பதிவுகள் தளத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்படும் என்று தெரிவித்தது. எலான் மஸ்க்-இன் இந்த அறிவிப்பு பேசுபொருளாக மாறியது.
மேலும், இந்தோனேசியாவில் எக்ஸ் தளத்தில் ஆபாச பதிவுகளுக்கு அனுமதி கிடையாது என்று அந்நாட்டின் தகவல் தொடர்பு துறை அமைச்சர் தெரிவித்து இருந்தார். மேலும், எக்ஸ் தளத்தில் ஆபாசமாக சித்தரித்து வெளியிடப்படும் பதிவுகள் இருப்பின், எக்ஸ் தளத்திற்கு நாட்டில் தடை விதிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.