latest news
புது பிளான் போடும் ரெட்மி.. 6000mAh பேட்டரி, விரைவில் Sub-Flagship போன் வெளியீடு
சியோமி நிறுவனம் சற்றே சிறிய ஸ்கிரீன் கொண்ட புது ஸ்மார்ட்போன் மாடலை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ரெட்மி பிராண்டிங்கில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்றும், இது கிட்டத்தட்ட ஃபிளாக்ஷிப் மாடல் போன்ற அனுபவத்தை வழங்கும் என்று கூறப்படுகிறது. இது குறித்து டிப்ஸ்டர் வெளியிட்டுள்ள தகவல்களில் புது ரெட்மி போன் கச்சிதமாக உருவாக்கப்பட்டு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதன் ஸ்கிரீன் அளவு கிட்டத்தட்ட சியோமி 14 போன்றே இருக்கும். இது சியோமியின் ஃபிளாக்ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன் ஆகும். எனினும், ரெட்மி போனில் வயர்லெஸ் சார்ஜிங், டெலிபோட்டோ கேமரா லென்ஸ் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படாது என்றே தெரிகிறது.
சீனாவை சேர்ந்த வெய்போ தளத்தில் வெளியாகி உள்ள தகவல்களில், ரெட்மி பிராண்டு ஃபிளாக்ஷிப் பிரிவில் களமிறங்குவதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. டிப்ஸ்டரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வெளியிட்டுள்ள தகவல்களில் ரெட்மி பிராண்டு உருவாக்கும் புது ஸ்மார்ட்போன் 6.3 இன்ச் ஸ்கிரீன் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன் கிட்டத்தட்ட ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அனுபவத்தை வழங்கும். இந்த ஸ்மார்ட்போன் 6000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. முன்னதாக சியோமி 15 ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆன நிலையில், தற்போது ரெட்மி போனின் விவரங்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
சியோமி 15 மாடலில் 6.36 இன்ச் ஃபிளாட் AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், 50MP பிரைமரி கேமரா, 50MP அல்ட்ரா வைடு லென்ஸ் மற்றும் 50MP 3.2x டெலிபோட்டோ கேமரா வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் கொண்டிருக்கும் என்றும் இதில் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஹைப்பர் ஓஎஸ் 2.0 வழங்கப்படும் என்று தெரிகிறது.