latest news
சர்ச்சையில் சிக்கிய சியோமி – விரைந்து அளித்த பதில் என்ன தெரியுமா?
சீனாவை சேர்ந்த நுகர்வோர் மின்சாதன உற்பத்தியாளர் சியோமி, தனது ஸ்மார்ட்போன்களில் 5ஜி கனெக்டிவிட்டி வழங்கும் விவகாரத்தில் புதிய சர்ச்சையில் சிக்கி இருக்கிறது. இந்திய டெலிகாம் சந்தையில் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக 5ஜி கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு வருகிறது. எனினும், ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் தங்களது சாதனங்களில் 5ஜி வசதியை வழங்குவதில் தொடர்ந்து மெத்தன போக்கில் செயல்பட்டு வருகின்றன.
இன்றும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் 5ஜி வசதி வழங்கப்படாமலேயே உள்ளது. இந்த பட்டியலில் சியோமி நிறுவன சாதனங்களும் அடங்கும். இதில் கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு விஷயம் சில ஸ்மார்ட்போன்களில் 5ஜி SA (ஸ்டாண்ட் அலோன்) மற்றும் சில சாதனங்களில் 5ஜி NSA (நான்-ஸ்டாண்ட் அலோன்) தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றன. மிக குறைந்த எண்ணிக்கையிலான சாதனங்களே இந்த இரண்டு தொழில்நுட்பத்தையும் சப்போர்ட் செய்யும் வசதி கொண்டுள்ளன.
இந்திய பயனர்களுக்கு இரண்டு தொழில்நுட்ப சப்போர்ட் கொண்ட சாதனங்களே பயன்பாட்டிற்கு உகந்ததாக இருக்கும். டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் NSA தொழில்நுட்பத்தில் 5ஜி சேவையை வழங்கி வருகிறது. மற்றொரு முன்னணி நிறுவனமான ஜியோ SA தொழில்நுட்பத்தில் 5ஜி சேவையை வழங்கி வருகிறது. இதனால் ஒரு பயனர் இவை இரண்டு சேவைகளை பயன்படுத்தும் போது, அவரால் இரு நிறுவனங்களின் 5ஜி சேவையை பயன்படுத்த முடியாது.
சியோமி நிறுவனத்தின் சில ஸ்மார்ட்போன் மாடல்கள் 5ஜி NSA தொழில்நுட்பத்தை மட்டும் கொண்டிருக்கின்றன. சில மாடல்களில் இந்த வசதியும் வழங்கப்படவில்லை. இந்த நிலை காரணமாக சியோமி பயனர்கள் வைத்திருக்கும் சாதனங்களில் 5ஜி பயன்படுத்த முடியாதோ என்ற அச்சம் பயனர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த நிலையில், சியோமி இந்தியா நிறுவனம் தனது பயனர்களுக்கு அதிகாரப்பூர்வ டுவிட்டர் மூலம் விளக்கம் அளித்து இருக்கிறது. அதன்படி 5ஜி SA சப்போர்ட் இல்லாத 5ஜி சாதனங்களில் இதற்கான அப்டேட் வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்து இருக்கிறது.
Mi 10, Mi 10i, Mi 10T மற்றும் Mi 10T ப்ரோ போன்ற மாடல்களில் 5ஜி சப்போர்ட் ஒடிஏ அப்டேட் மூலம் வழங்கப்படும் என்று சியோமி தெரிவித்துள்ளது. சமீபத்தில் சியோமி 11 லைட் 5ஜி, Mi 11x மற்றும் Mi 11X ப்ரோ மாடல்களில் இதற்கான அப்டேட் வழங்கப்பட்டது. Mi 10 பயன்படுத்துவோருக்கு தங்களது சாதனங்களில் 5ஜி அப்டேட் வழங்கப்படவில்லை என்ற குற்றம்சாட்டினர். இதற்கான அப்டேட்கள் வெளியிடுவது பற்றிய தகவல் சமூக வலைதளங்களில் தெரிவிக்கப்படும் என்று சியோமி தெரிவித்துள்ளது.