Cricket
#JusticeForRuturaj… `BAD BOY’ இமேஜ் இருந்தாதான் எடுப்பீங்களா… ருதுராஜூக்குப் பெருகும் ஆதரவு!
இலங்கை சீரிஸுக்கான இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட் தேர்வு செய்யப்படாததற்கு எதிராக முன்னாள் வீரர்கள் பலரும் குரல் கொடுத்து வருகிறார்கள்.
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணி தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்திய அணியின் பயிற்சியாளராக கௌதம் காம்பீர் பதவியேற்ற பின்னர் இந்திய அணி விளையாடும் முதல் தொடர் இதுவாகும்.
இந்த சீரிஸுக்கான இந்திய அணியில் இரண்டு ஃபார்மேட்டுகளிலும் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சமீபத்திய ஜிம்பாப்வே தொடரில் சதமடித்த அபிஷேக் ஷர்மா ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. குறிப்பாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியும் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு வாய்ப்பளிக்கப்படாததற்கு எதிராக முன்னாள் வீரர்கள் பலரும் குரல் கொடுத்து வருகிறார்கள்.
இதுகுறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா, `இரண்டு ஃபார்மேட்டுகளிலும் ருதுராஜ் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார். அவர் என்ன செய்தார் என்பதற்காக அவரின் பெயர் தவிர்க்கப்பட்டிருக்கிறது? சுப்மன் கில் விளையாடாத அணிக்கு, ஆறு மாதங்களுக்கு முன் அவர் கேப்டனாகும் அளவுக்கு தகுதிபெற்றிருந்தார். ஆனால், இப்போது இரண்டு ஃபார்மேட்டுகளுக்கும் சுப்மன் கில் துணை கேப்டனாக இருக்கிறார். ஆனால், ருதுராஜூக்கு அணியில் கூட இடமில்லை. இது சரியானதா?’ என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்தநிலையில், ருதுராஜூக்கு ஆதரவாக இந்திய அணி முன்னாள் வீரரும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான சுப்ரமணியன் பத்ரிநாத்தும் குரல் கொடுத்திருக்கிறார். அவர் கூறுகையில், `இந்திய அணியில் இடம்பெற BAD BOY இமேஜ் தேவைபோல… நடிகைகளுடன் கிசுகிசு… உடம்பில் பச்சை மற்றும் நல்ல பி.ஆர். புரமோஷன்ஸ் இருந்தால் மட்டும்தான் இந்திய அணியில் இடம்கிடைக்குமா?’ என்று கேள்வியெழுப்பியிருக்கிறார்.