latest news
மதுரை நாம் தமிழர் நிர்வாகி கொலையில் திருப்பம்… 6 பேர் கைது – என்ன நடந்தது?
மதுரை நாம் தமிழர் கட்சி நிர்வாகி பாலசுப்ரமணியனை வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தனிப்படை போலீஸார் 6 பேரைக் கைது செய்திருக்கிறார்கள்.
மதுரை செல்லூரைச் சேர்ந்த பாலசுப்ரமணியன், நாம் தமிழர் கட்சியின் துணைச் செயலாளராக இருக்கிறார். இவர் நேற்று காலை 6.30 மணியளவில் நடைபயிற்சிக்கு சென்றிருந்தபோது 4 பேர் கொண்ட மர்ம கும்பலால் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் வீடு அருகே தல்லாகுளம் வல்லாபாய் தெருவில் நடந்த இந்தக் கொலை சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் தல்லாகுளம் போலீஸ் வழக்குப் பதிந்த நிலையில், மதுரை காவல் ஆணையர் லோகநாதன் நேரடியாக விசாரணையில் இறங்கினார். இந்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
போலீஸ் விசாரணையில், அப்பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் – பாண்டியராஜன் இடையே 4 செண்ட் நிலம் தொடர்பாக சொத்துப் பிரச்னை இருந்தது தெரியவந்தது. இதில், சகோதரர் பாண்டியராஜனுக்கு ஆதரவாக பாலசுப்ரமணியன் மகாலிங்கத்திடம் கட்டப்பஞ்சாயத்து செய்திருக்கிறார்.
மேலும், இந்தப் பிரச்னையைத் திர்க்க பாண்டியராஜன் மகள் பிரியாவுக்கு மகாலிங்கம் மகன் அழகு விஜய்க்கும் திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே தம்பதியினர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்திருக்கிறார்கள். மேலும், கணவர் அழகு விஜய் மீது பிரியா நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கும் தொடர்ந்திருக்கிறார்.
இந்த விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட கைகலப்பில் பாண்டியராஜன் தரப்பு கொடுத்த புகாரில் மகாலிங்கம் மற்றும் அவரது உறவினர்கள் சிலர் போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தநிலையில், அழகு விஜய்யை போனில் தொடர்புகொண்ட பிரியா மகாலிங்கம் சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் அப்பா பாண்டியராஜனும் பெரியப்பா பாலசுப்ரமணியனும் இணைந்து ஏதாவது செய்துவிடத் திட்டமிட்டிருப்பதாகச் சொன்னதாகக் கூறப்படுகிறது.
இதனால், பாண்டியராஜன் நம்மைத் தாக்கும் முன்னர் நாம் முந்திக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணத்தில் மகாலிங்கம், அவரின் மனைவி நாகம்மாள், மகன் அழகு விஜய் ஆகியோர் திட்டமிட்டிருக்கிறார்கள். இதையடுத்து, அவர்களிடம் லோடு மேனாக வேலை பார்த்த ஒரு சிறார்,பரத், கோகுல கண்ணன் மற்றும் பென்னி ஆகியோரை வைத்து வெட்டி படுகொலை செய்திருப்பதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. கொலை செய்யப்பட்ட பாலசுப்ரமணியன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.