india
பல பகுதிகளுக்கு செல்லவே முடியல… கோரமுகமாகும் வயநாடு… கலங்கும் மீட்புக்குழு!…
கேரளாவில் பெய்து வரும் தொடர் மழையால் வயநாடு பகுதியில் ஏற்பட்டிருக்கும் நிலச்சரிவு நாட்டையே உலுக்கி இருக்கும் நிலையில், ஆயிரத்திற்கும் அதிகமானோர் இதில் சிக்கி இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.
தொடர் கனமழையால் வயநாட்டில் உள்ள முண்டக்காய் பகுதியில் இன்று அதிகாலை 2 மணி அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. தொடர்ந்து காலை 4 மணிக்கு சூரல்மா பகுதியில் இரண்டாவது நிலச்சரிவு ஏற்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கிறது.
இந்த நிலச்சரிவால் அப்பகுதியில் இருக்கும் பள்ளிகள, வீடுகள் என முக்கிய இடங்கள் சேதம் அடைந்துள்ளன. மேலும் நானூறு குடும்பத்தினர் இதில் சிக்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதுவரை உயிரிழப்பு 40 கடந்துள்ளது. விமானம் மூலம் மீட்பு பணி தீவிரமடைந்துள்ளது.
வடம் பயன்படுத்தி முண்டகை மற்றும் அட்ட மலை செல்ல தற்காலிகமாக பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் பெங்களூரில் இருந்து பேரிடர் மீட்பு குழு வயநாடு விரைந்துள்ளது. இதற்கு முன் இப்பகுதியில் நடந்த நிலச்சரிவை விட இந்த விபத்து கோரமானதாக கூறப்படுகிறது. பலி எண்ணிக்கை உச்சத்தில் உயரும் என அதிர்ச்சி தகவல்களும் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கிறது.
இதுகுறித்து மீட்பு பணி அதிகாரிகள் கூறுகையில், இதற்கு முன் வயநாட்டில் கவளப் பாறை, புத்து மலை பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. அதைவிட இந்த விபத்தில் பலி எண்ணிக்கை அதிகம் ஆகும். பல பகுதிகளுக்கு மீட்பு குழுவினரால் செல்லவே முடியவில்லை.. நேரம் ஆக ஆக இதன் கோரமுகம் இன்னும் அதிகமாகும் எனவும் தெரிவித்துள்ளார்.