india
வயநாடு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 316ஐ கடந்தது… மேலும் அதிகரிக்கும் அபாயம்!..
கேரள மாநிலம் வயநாட்டு பகுதியில் கடுமையான நிலச்சரிவு நடந்து நான்கு நாட்களை கடந்து இருக்கும் நிலையில் பலி எண்ணிக்கை 300 கடந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
கேரளாவை சேர்ந்த முண்டகை கிராமத்தில் நள்ளிரவு 2 மற்றும் 4 மணிக்கு திடீர் நிலச்சரிவு நடந்தது. இதில் 500 குடும்பத்தினரை சேர்ந்த 1000 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தேசிய பேரிடர் குழு, ராணுவத்தினர் மற்றும் மாநில மீட்புக்குழு சேர்ந்து மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் தற்போது பலி எண்ணிக்கை 316ஐ கடந்து இருக்கிறது. மேலும் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது. 200க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகின்றனர். இதுமட்டுமல்லாமல் இன்னமும் 240 பேரை காணவில்லை எனத் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
தொடர்ச்சியாக, மீட்புப்பணியும் நடந்து வருகிறது. 3000 பேர் வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சூரல்மலை முதல் முண்டக்கை இடையே கனரக வாகனங்கள் செல்ல தற்காலிக பாலம் 24 மணிநேரத்துக்குள் அமைக்கப்பட்டது. அதன் வழியாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தேவையான நிவாரண பணிகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளன.
கேரள மாநிலம் வயநாட்டில் செவ்வாய் நள்ளிரவு முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி அட்டமலை, நூல்மலை ஆகிய மலைக் கிராமங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. நள்ளிரவு நேரம் என்பதால் பெரும்பாலும் அனைத்து மக்களும் மண்ணுக்குள் புதைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.