india
ஆளில்லாமல் கிடக்கும் வயநாடு வீடுகள்… இரக்கமின்றி நடக்கும் திருட்டுகள்.. அதிர்ச்சி சம்பவம்
கேரளா மாநிலம் வயநாட்டு பகுதியில் கடந்த வாரம் ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்கள் தற்போது முகாம்களில் இருக்கும் நிலையில் திருட்டுகள் அதிகமாக நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
கேரளா மாநிலத்தில் இருக்கும் வயநாட்டு பகுதியில் முண்டக்கை உள்ளிட்ட கிராமங்களில் அதிகாலை கடும் நிலச்சரிவு நடந்தது. இதில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். பலி எண்ணிக்கை 350 ஐ கடந்து இருக்கிறது. இன்னும் சில நூறு பேரை காணவில்லை என தொடர்ச்சியாக மீட்புப்பணிகளும் நடந்து வருகிறது.
இதில் பெரிய அளவு காயம் ஏற்படாத மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வீடுகள் ஆள் அரவமில்லாமல் இருப்பதை நோட்டமிட்டு திருட்டு பணிகளில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சூரல்மா கிராமங்களில் இருந்த பணம், பத்திரம் திருடி சென்றதாக கூறப்படுகிறது.
கடந்த சனிக்கிழமை இரவு வெள்ளார்மலை பகுதியில் இருந்த வீட்டில் ஆள் யாருமில்லை என நினைத்த ஒரு கும்பல் நுழைய நினைத்தது. ஆனால் திடீரென வீட்டினர் கதவை திறக்க அரசு அதிகாரிகள் பாதிப்பு பகுதிகளில் தங்கி இருக்கும் மக்களை கணக்கெடுக்கும் பணியில் நியமிக்கப்பட்டதாக பொய் சொல்லி தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
மேலும் தொடர்ந்து புகார்கள் குவிந்து வரும் நிலையில், சூரல்மலா மற்றும் முண்டக்கை பகுதியில் சனிக்கிழமை முதல் போலீசார் ரோந்து பணியை தொடங்கி இருக்கின்றனர். அனுமதியின்றி பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் வீடுக்குள் நுழைபவர்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.