Cricket
மழையால் ஈரமாவே இருக்கு.. மைதானத்தை Fan மூலம் உலர்த்திய ஊழியர்கள்..
ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான ஒன் ஆஃப் டெஸ்ட் போட்டி கிரேட்டர் நொய்டாவில் செப்டம்பர் 8 ஆம் தேதி துவங்க இருந்தது. எனினும், போட்டி நடைபெற இருந்த முதல் இரண்டு நாட்களில் டாஸ் கூட போடப்படாமல் ஆட்டம் தடைப்பட்டுள்ளது.
மழை காரணமாக மைதானத்தில் நீர் தேங்கியிருந்தது மற்றும் மைதானம் ஈரமாகவே இருந்தது தான் போட்டி துவங்காததற்கு காரணம் ஆகும். கிரேட்டர் நொய்டா ஸ்போர்ட்ஸ் வளாக மைதானத்தில் மழைநீர் வடிகால் வசதிகள் மோசமாக இருப்பது, இரு அணிகள் இடையிலான போட்டியில் டாஸ் கூட போட விடாமல் செய்துள்ளது. மோசமான வசதிகளை குற்றம்சாட்டிய ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம், இனி இந்த மைதானத்திற்கு வரப் போவதில்லை என்று கூறியிருந்தது.
இந்த நிலையில், எப்படியாவது போட்டியை நடத்தியே ஆக வேண்டும் என்ற நிலையில், மைதான ஊழியர்கள் மின்விசிறியை பயன்படுத்தி, மைதானத்தில் உள்ள ஈரத்தை உலரத்த முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து கையில் மேசை மின்விசிறியுடன் களத்திற்குள் நுழைந்த மைதான பராமரிப்பாளர்கள் கூலாக ஃபேன் போட்டு மைதானத்தை உலர்த்திக் கொண்டிருந்தனர்.
போட்டியின் முதல் நாளில் செய்ததை போன்ற இரண்டாம் நாளான நேற்றும், அம்பயர்கள் களத்திற்குள் பலமுறை வந்து போட்டி நடத்த முடியுமா என்று ஆய்வு செய்தனர். எனினும், மைதானத்தில் இருந்த ஈரப்பதம் போட்டியை நடத்த அனுமதிக்கவில்லை. ஏற்கனவே இரண்டு நாள் போட்டி டாஸ் கூட போடப்படாமல் தடைப்பட்ட நிலையில், இன்றாவது போட்டி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.