Cricket
மழையும் வெச்சு செய்யுது.. மூன்றாம் நாள் ஆட்டமும் க்ளோஸ்..செம கடுப்பில் ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான ஒன் ஆஃப் டெஸ்ட் போட்டி இந்தியாவில் நடைபெற திட்டமிடப்பட்டு இருந்தது. கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஸ்போர்ட்ஸ் வளாக மைதானத்தில் நடைபெற இருந்தது. செப்டம்பர் 8 ஆம் தேதி இந்த டெஸ்ட் போட்டி துவங்க இருந்த நிலையில், மோசமான வானிலை மற்றும் மைதானத்தில் ஈரப்பதம் காரணமாக முதல் நாள் மற்றும் இரண்டாம் நாள் ஆட்டம் டாஸ் கூட போடப்படாமல் தடைப்பட்டது.
போட்டியை நடத்தியே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில், மைதான ஊழியர்கள் மின்விசிறியை பயன்படுத்தி, மைதானத்தில் உள்ள ஈரத்தை உலரத்தும் முயற்சிகளில் ஈடுபட்டனர். மேலும், காய்ந்த புல், மண் கொண்டு மைதானத்தை விளையாடுவதற்கு ஏற்ற வகையில் தயார்படுத்தும் பணிகளில் முழு முயற்சியுடன் ஈடுபட்டு வந்தனர். எனினும், இவை எதற்கும் பலன் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், போட்டியின் மூன்றாம் நாள் இன்று தொடங்குமா என்ற கேள்விக்குறி நீடித்து வந்தது. தற்போது மழை காரணமாக இன்றைய போட்டியும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த முடிவு ஆப்கானிஸ்தான் அணியை பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
முன்னதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு கான்பூர் மற்றும் பெங்களூரு மைதானங்களில் விளையாடவும் பிசிசிஐ சார்பில் அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. எனினும், ஆப்கானிஸ்தான் அணி நொய்டாவில் உள்ள சூழல் காரணமாக இந்த மைதானம் தான் வேண்டும் என்று விரும்பி தேர்வு செய்தது. நொய்டாவில் உள்ள மைதானம் மணல் சார்ந்தது இல்லை என்பதால், மழை காலங்களில், இதனை உலர்த்துவது சுலபமான காரியம் இல்லை.
நேற்றிரவு பெய்த மழை காரணமாக மைதானத்தின் பவுண்டரி லைனில் மழை நீர் காணப்படுகிறது. மேலும், மைதானத்தை முழுமையாக மறைக்கும் அளவுக்கான கவர்கள் இல்லாத சூழல் நிலவுகிறது. நொய்டா மைதானத்தில் போட்டியை நடத்துவதற்கு ஏற்ப மாற்றுவதற்கு பிசிசிஐ சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் கூடுதல் வசதிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தது. எனினும், இவை எதுவும் போட்டியை நடத்த ஒத்துழைக்காமல் போனது.