Connect with us

Cricket

டோனியை அவுட் செய்தது வருத்தமா இருந்தது.. ஆர்சிபி வீரர் ஓபன் டாக்

Published

on

2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிக் கட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இடையிலான போட்டியை சிஎஸ்கே மற்றும் எம்எஸ் டோனி ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிட மாட்டார்கள். வாழ்வா, சாவா நிலையில் நடைபெற்ற இந்த போட்டியில் இக்கட்டான சூழலில் எம்எஸ் டோனி அவுட் ஆனது ரசிகர்கள் மட்டுமின்றி அவரையும் மனதளவில் மிகுந்த வருத்தத்தில் ஆழ்த்தியது.

போட்டியின் கடைசி ஓவரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்து பந்துகளில் 11 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற நிலையில் எம்எஸ் டோனி போட்டியை ஃபினிஷ் செய்வார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், யாஷ் தயால் வேறு கிளைமேக்ஸ் கொடுத்து சிஎஸ்கே ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இக்கட்டான சூழ்நிலையில், கடைசி ஓவரை வீசிய யாஷ் தயால் எம்எஸ் டோனி விக்கெட்டை எடுத்தார்.

அடுத்த ஐபிஎல் சீசனில் டோனி விளையாடுவாரா? சிஎஸ்கே ஜெர்சியில் எம்எஸ் டோனி மீண்டும் விளையாடுவாரா என ஏகப்பட்ட கேள்விகளுடன் போட்டியை காண வந்த ரசிகர்கள் அவர் அவுட் ஆகி பெவிலியன் திரும்பியதை பார்த்து மனம் நொந்தனர். கிட்டத்தட்ட கிரிக்கெட்டில் கடைசி இன்னிங்ஸில் டோனி விளையாடுகிறாரோ என்ற ஏக்கத்துடன் வந்தவர்களுக்கும், நாம் அடுத்த சீசனில் விளையாடுவோமா என்ற கேள்வியுடன் களமிறங்கிய டோனிக்கும் அவுட் ஆனது வருத்ததை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், எம்எஸ் டோனி விக்கெட் எடுத்தது தனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியதாக யாஷ் தயால் தெரிவித்துள்ளார். யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த யாஷ் தயால் எம்எஸ் டோனியின் விக்கெட்டை எடுத்தது பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.

“அவரை அவுட் செய்ததும் நான் மோசமாக உணர்ந்தேன். மக்கள் என்ன சொல்கிறார்கள் என்று எனக்கு தெரியாது, ஆனால் அவர் களத்தில் இருந்து வெளியேறும் போது இருந்த விரக்தி, அவர் மீண்டும் விளையாடுவாரா, இல்லையா என்பதை உணர்த்தியது. அவரை மீண்டும் களத்தில் பார்ப்போமா? என என் மனதில் நிறைய விஷயங்கள் ஓடிக் கொண்டே இருந்தது. பிறகு பெருமூச்சு விட்டேன், சற்று நிம்மதி கிடைத்தது,” என்று யாஷ் தயால் தெரிவித்தார்.

google news