latest news
விரைவில் இந்தியா வரும் சாட்ஜிபிடி ஐஒஎஸ் ஆப்!
ஓபன்ஏ.ஐ. நிறுவனம் தனது சாட்ஜிபிடி செயலியின் ஐஒஎஸ் வெர்ஷனை உலகின் பல்வேறு நாடுகளில் வெளியிடும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. ஓபன்ஏ.ஐ. நிறுவன மூத்த தொழில்நுட்ப அதிகாரி மிரா முராட்டியின் சமீபத்திய ட்விட்டர் பதிவில் சாட்ஜிபிடி செயலி அல்பேனியா, க்ரோஷியா, ஃபிரான்ஸ், ஜெர்மனி, ஐயர்லாந்து, பிரேசில், தென் கொரியா, நியூசிலாந்து, பிரிட்டன், நைஜீரியா மற்றும் நிகர்குவா போன்ற நாடுகளில் சாட்ஜிபிடி ஐஒஎஸ் வெர்ஷன் கிடைப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் பல்வேறு நாடுகளில் இந்த ஆப் விரைவில் வெளியிடப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார். இதன் அடுத்தக்கட்ட வெளியீட்டின் போது இந்தியாவிலும் சாட்ஜிபிடி ஐஒஎஸ் செயலி வெளியிடப்படும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்து இயங்கும் சாட்ஜிபிடி சேவை இந்தியாவில் அதிக பிரபலம் அடைந்து வருகிறது. ஆண்ட்ராய்டு போன்களுக்கான சாட்ஜிபிடி செயலி இதுவரை வெளியிடப்படவில்லை.
முதற்கட்டமாக சாட்ஜிபிடி சேவை வெப் வெர்ஷன் (வலைதளம்) வடிவில் கடந்த ஆண்டு அறிமுகமாகி உலகளவில் பெரும் வரவேற்பை பெற்றது. உலகம் முழுக்க அதிவேக வளர்ச்சியை பதிவு செய்த பிளாட்ஃபார்ம் ஆக சாட்ஜிபிடி சாட்பாட் உயர்ந்தது. பொது பயன்பாட்டுக்கு வெளியான முதல் இரண்டு மாதங்களிலேயே சாட்ஜிபிடி சேவையை 100 மில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்தினர்.
இது போன்ற வரவேற்பை இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டாக் போன்ற சேவைகளாலேயே எட்ட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லட் போன்ற சாதனங்களிலும் இந்த சேவையின் வலைதள வெர்ஷனை பயன்படுத்த முடியும். மொபைல் சாதனங்களில் இந்த எந்நேரமும் சிறப்பாக செயல்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது. டெக்ஸ்ட்-டு-இமேஜ் (Text-to-Image) ஜெனரேட்டர் பாட் டால்-இ (Dall-E) செயலியை ஓபன்ஏ.ஐ. நிறுவனம் கடந்த வாரம் ஐரோப்பாவில் வெளியிட்டது.
சாட்ஜிபிடி வெப் வெர்ஷனை போன்றே இதன் செயலியும் உரையாடல் நடையில் பயனர் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறது. நீண்ட நெடிய செய்தி குறிப்புகளை எடிட் செய்வது, ஆப் கோட்களை மறு ஆய்வு செய்வது, கணிதம் சார்ந்த கணக்குகளை தீர்ப்பது போன்ற வசதிகளை சாட்ஜிபிடி வழங்கி வருகிறது. சாட்ஜிபிடி பிளஸ் சந்தா (20 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1,655) பெறுவோருக்கு கூடுதலாக சில அம்சங்கள், பிளக்-இன் சப்போர்ட், உடனடி பதில் பெறும் வசதி, காத்திருப்பு நேரம் இல்லாத வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. ஐஒஎஸ் செயலியில் இந்த வசதி பிளஸ் சந்தா வைத்திருப்போருக்கு வழங்கப்படுகிறது.
ஸ்பானிஷ், ஃபிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலி, போர்த்துகீசு, தட்சு, ரஷிய, சீன, ஜப்பான் மற்றும் கொரிய மொழிகளை புரிந்து கொள்ளும் வசதியை சாட்ஜிபிடி வழங்குகிறது. இந்த சாட்பாட் இந்தியிலும் பேசும், ஆனால் ஆங்கிலத்தில் பேசுவது போன்ற மொழியாற்றல் இந்தி மொழியில் சீராக இருக்காது.