Cricket
என்னடா இது பும் பும்-க்கு வந்த சோதனை.. பறிபோன ரேங்கிங், ரசிகர்கள் அதிர்ச்சி!
தென் ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி டெஸ்ட் வேகப்பந்து வீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். இதன் மூலம் அவர் ஏற்கனவே முதலிடத்தில் இருந்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.
முன்னதாக வங்கதேசம் அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் வைத்து ரபாடா டெஸ்ட் அரங்கில் தனது 300வது விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். இதே போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
மறுப்பக்கம் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையே நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஒரு விக்கெட் கூட கைப்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக ஐசிசி டெஸ்ட் வேகப்பந்து வீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் ஜஸ்பிரித் பும்ரா இரண்டு இடங்கள் சரிந்து மூன்றாவது இடத்தில் உள்ளார்.
ஐசிசி-யின் டெஸ்ட் கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் ககிசோ ரபாடாவுக்கு அடுத்த இடத்தில் ஆஸ்திரேலிய அணி வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹாசில்வுட் உள்ளார். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் இரண்டு இடங்கள் சரிந்து நான்காவது இடத்தில் உள்ளார். இந்த பட்டியலின் டாப் 10-இல் புதுவரவு வீரராக பாகிஸ்தான் அணியின் நோமன் அலி இடம்பிடித்துள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை பொருத்தவரை இந்திய அணி 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்துள்ளது. இதனால் இந்தியா-நியூசிலாந்து டெஸ்ட் தொடரில், நியூசிலாந்து அணி 2-0 கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.