உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்று ஆப்பிள். ஐபோன், ஐமேக், மேக்புக், மேக் மினி, ஆப்பிள் வாட்ச், ஐபேட் என ஸ்மார்ட்போன் மற்றும் கணினி சார்ந்த சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. ஆப்பிள் நிறுவன ஸ்மார்ட்போன், டேப்லெட் மற்றும் கணினி சாதனங்கள் உலகளவில் மிகவும் பிரபலம். எனினும், ஆப்பிள் நிறுவனம் இந்த சாதனங்களை விட இவற்றை பயன்படுத்துவதற்காக விற்பனைக்கு வரும் அக்சஸரீக்களுக்கான வருவாய் பலமடங்கு அதிகம்.
ஆப்பிள் நிறுவனத்தின் மிகமுக்கிய வருவாய் ஈட்டித்தரும் பிரிவுகளில் ஒன்றாக அக்சஸரீக்கள் உள்ளன. பொதுவாகவே ஆப்பிள் நிறுவன சாதனங்களின் விவரங்கள் மிகவும் ரகசியமாக வைக்கப்படும். வெளியீட்டுக்கு முன்புவரை ஆப்பிள் நிறுவன சாதனங்கள் பற்றிய உறுதியான தகவல்கள் அவ்வளவு எளிதில் வெளியாகி விடாது. இந்த நிலையில் தான் ஆப்பிள் நிறுவன சாதனங்களின் விவரங்களை வெளியிட்ட காரணத்திற்காக மூன்று பேரை சீனா கைது செய்த சம்பவம் அரங்கேறியது.
இந்த சம்பவம் நடந்து சில ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும், அக்சஸரீக்கள் பிரிவில் ஆப்பிள் நிறுவனம் எந்த அளவுக்கு சீரியசாக இருக்கிறது என்பதை உணர்த்தும் வகையில் இது பற்றிய தகவல் தற்போது வேகமாக பரவி வருகிறது. ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் R&D பிரிவில் பணியாற்றி வந்த மூன்று ஊழியர்களைத் தான் சீனா கைது செய்தது. இவர்கள் மூவரும் ஐபேட் 2 சாதனம் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பே அவை பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
மூவருக்கும் குறைந்தபட்சம் ஒரு ஆண்டு முதல் அதிகபட்சம் 18 மாதங்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டன. இதுதவிர 4500 டாலர்கள் தொடங்கி அதிகபட்சம் 23,000 டாலர்கள் வரை அபராதமும் விதிக்கப்பட்டன. இந்த கைது நடவடிக்கை கடந்த 2010 டிசம்பர் மாத வாக்கில் நடந்தது. கைது செய்யப்பட்ட மூவரும் ஐபேட் 2 டிசைன் சார்ந்த விவரங்களை ஷென்சென்-ஐ சேர்ந்த மேக்டாப் எலெக்டிரானிக்ஸ் என்ற நிறுவனத்திற்கு வழங்கியுள்ளனர்.
இந்த விவரங்களை கொண்டு மேக்டாப் எலெக்டிரானிக்ஸ் நிறுவனம் தனது போட்டியாளர்களை விட முன்கூட்டியே ஐபேட் 2 கேஸ்களை உருவாக்கி சந்தையில் அதிக லாபம் ஈட்டியுள்ளனர். இவ்வாறு செய்வதற்காக மேக்டாப் நிறுவனம் மூன்று ஊழியர்களுக்கு 3,000 டாலர்கள் ரொக்கம் மற்றும் தனது சாதனங்களில் தள்ளுபடி வழங்கியுள்ளது.
நிறுவனத்தின் எதிர்கால திட்டங்கள் பற்றிய விவரங்களை காப்பதில் ஸ்டீவ் ஜாப்ஸ்-ஐ விடவும் அதிக கவனமாக செயல்படக்கூடியவர் டிம் குக். இதன் காரணமாகவே ஆப்பிள் நிறுவன சாதனங்களின் ஹார்டுவேர் விவரங்கள் மிகவும் ரகசியமாக உள்ளன. சாதனங்கள் வெளியீட்டில் பல கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடு செய்யப்படுவதை அடுத்து, ஆப்பிள் நிறுவனம் இத்தகைய விவரங்கள் லீக் ஆவதை தடுக்கும் முயற்சியை தொடர்ந்து தீவிரப்படுத்திக் கொண்டு தான் வருகிறது.