எம்ஜிஆர், அம்மாவை மறந்தவங்க நீங்க.. அதிமுக-வை கிழித்துத் தொங்கவிட்ட செங்கோட்டையன்..

தன்னை ஏற்றி விட்ட ஏணியை மறந்தவர்கள் தான் திமுக மற்றும் அதிமுகவினர் என தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கோவை விமான நிலையத்தில் ஆவேசமாகப் பேட்டியளித்துள்ளார்.

தலைவர்களை மறந்த துரோகம்!
செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் தங்களை உருவாக்கிய ஆளுமைகளை ஓரங்கட்டி வருவதாகக் குற்றம் சாட்டினார். “புரட்சித் தலைவர் எம்ஜிஆர், அம்மா (ஜெயலலிதா), பேரறிஞர் அண்ணா என நம்மை ஆளாக்கிய தலைவர்களை இன்று இரு கட்சிகளுமே மறந்துவிட்டன. எந்த ஒரு கூட்டம் நடத்தினாலும், அந்தத் தலைவர்களின் படத்தைப் போடுவதற்குக்கூட அவர்களுக்கு மனமில்லை. மாறாக, தங்களது படங்களை மட்டுமே போட்டுக்கொண்டு சுயவிளம்பரம் தேடிக்கொள்கிறார்கள். இந்த வேடிக்கையை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்,” என்று அவர் சாடினார்.

அதிமுகவை விட்டு வெளியேறியது ஏன்?
அதிமுகவில் இருந்து தான் வெளியேறியதற்கான காரணத்தையும் அவர் பகிரங்கமாக உடைத்தார். “தன்னை வளர்த்த தலைவர்களையே மறந்துவிட்டு, தனிநபர் ஆதிக்கத்தைச் செலுத்துவது மிகவும் மோசமான காரியம். இதைப் பொறுக்க முடியாமல் தான் நான் அந்த இயக்கத்தை விட்டு வெளியே வந்தேன். யாரால் நாம் இந்த இடத்திற்கு வந்தோம் என்பதை ஒருபோதும் மறந்துவிடக்கூடாது,” என்று எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு மறைமுகமாகச் ‘செக்’ வைத்தார்.

இன்னமும் என் சட்டைப் பையில் அம்மா தான்!
தாம் இன்னும் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசி என்பதை நிரூபிக்கும் வகையில் தனது சட்டைப் பையைக் காட்டிப் பேசிய அவர்,

“மற்றவர்கள் அதிகாரத்திற்காக மாறலாம், ஆனால் நான் அப்படிப்பட்டவன் அல்ல. இன்றும் எனது சட்டைப் பையில் ஜெயலலிதா அம்மாவின் புகைப்படத்தை வைத்துத்தான் நான் நடைபோட்டுக் கொண்டிருக்கிறேன். என் உயிர் உள்ளவரை நான் யாருக்காக உழைத்தேனோ, அந்தத் தலைவர்களை மறக்க மாட்டேன்.”

2026-ல் பெரிய மாற்றம்!
விஜய்யின் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்ட அவர், பழைய தலைவர்களை மதிக்காத கட்சிகளுக்கு மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள் என்றும் எச்சரித்தார்.

Leave a Comment