தமிழக அரசியலில் குறிப்பாக அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று ஒரு முக்கிய பேட்டியை அளித்துள்ளார்.
மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி?
தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அவர் அதை மறுக்காமல் சூசகமாகப் பதிலளித்தார். “பிரிந்துள்ள அதிமுகவின் அனைத்து சக்திகளும் ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் இன்றைய தலையாய கோரிக்கையாக இருக்கிறது. அதைத் தவிர வேறு எந்தக் கோரிக்கையும் இப்போது கிடையாது,” என்று அவர் தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமி பச்சைக்கொடி?
இந்தக் கூட்டணியில் ops இணைய வேண்டும் என்றும், இதற்கு எடப்பாடி பழனிசாமி (EPS) பச்சைக்கொடி காட்டிவிட்டதாகவும் டெல்லி வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன. வரும் தேர்தலில் திமுக மற்றும் தவெக-வை எதிர்கொள்ள வேண்டுமானால், அதிமுகவின் அனைத்து அணிகளும் ஓரணியில் திரண்டால் மட்டுமே முடியும் என்பதை பாஜக மேலிடம் வலியுறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
அதிமுக தொண்டர்கள் எதிர்பார்ப்பு:
“அதிமுக ஒன்றிணைய வேண்டும்” என்று ஓபிஎஸ் மீண்டும் மீண்டும் வலியுறுத்துவது, எடப்பாடி தரப்பில் ஏதேனும் சமரச முயற்சிகள் நடக்கிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. ஒருவேளை ஓபிஎஸ், டிடிவி தினகரன் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மீண்டும் ஓரணியில் திரண்டால், அது 2026 சட்டமன்றத் தேர்தலில் ஒரு ‘மெகா’ கூட்டணியாக உருவெடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.