தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவின் நிலைப்பாடு பரிதாபமாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் ராஜ்யசபா சீட் விவகாரத்தில் திமுக காட்டிய ஆர்வம், தேமுதிகவினரிடையே ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது உண்மை. ஆனால், தற்போது தொகுதிப் பங்கீடு என்று வரும்போது திமுக தலைமை காட்டும் மெத்தனம் பிரேமலதா விஜயகாந்துக்கு அதிர்ச்சியை அளிப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். “உங்களுக்கு தான் ஒரு ராஜ்யசபா சீட் கொடுத்துவிட்டோமே, இப்போது தொகுதி உடன்பாடு பற்றி என்ன பேச்சுவார்த்தை வேண்டிக்கிடக்கிறது” என்ற ரீதியில் திமுகவின் அணுகுமுறை இருப்பதாக தெரிகிறது. இது தேமுதிகவின் அரசியல் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் ஒரு நகர்வாகவே பார்க்கப்படுகிறது.
திமுக கூட்டணியை பொறுத்தவரை, ஏற்கனவே பெரிய கட்சிகளான காங்கிரஸ், விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குத் தொகுதிகளை பிரித்துக் கொடுப்பதிலேயே பெரும் இழுபறி நீடித்து வருகிறது. இத்தகைய சூழலில், தேமுதிகவுக்கு அதிக இடங்களை ஒதுக்கினால் அது மற்ற கூட்டணி கட்சிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தும் என திமுக கருதுகிறது. இதனால், “முதலில் களத்தில் இறங்கி திமுக கூட்டணியின் வெற்றிக்காக தீவிரப் பிரச்சாரத்தை செய்யுங்கள், தொகுதிகள் குறித்து கடைசியில் பார்த்துக்கொள்ளலாம்” என்று தேமுதிக தலைமைக்கு கூறியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இது ஒருவகையில் தேமுதிகவின் வாக்கு வங்கியை பயன்படுத்திக்கொண்டு, பிரதிபலனாக ஒன்று அல்லது இரண்டு இடங்களையே வழங்க திட்டமிடும் திமுகவின் தந்திரமாகவே விமர்சிக்கப்படுகிறது.
பிரேமலதா விஜயகாந்த் தனது கட்சியின் கௌரவத்தை நிலைநாட்ட வேண்டும் என்பதற்காக கூடுதல் தொகுதிகளை கேட்டு வலியுறுத்தி வருகிறார். ஆனால், திமுகவோ ராஜ்யசபா சீட்டை ஒரு முற்றுப்புள்ளியாக வைத்து, தேமுதிகவின் பேரம் பேசும் சக்தியை அடக்க பார்க்கிறது. ஒரு ராஜ்யசபா உறுப்பினர் பதவியை கொடுத்துவிட்டு, அதற்கு ஈடாக பல சட்டமன்ற தொகுதிகளைத் தியாகம் செய்ய சொல்வது தேமுதிகவுக்கு இழைக்கப்படும் அநீதி என அக்கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் குமுறுகின்றனர். “கடைசியில் ஒன்று அல்லது இரண்டு தொகுதிகள் தரப்படும்” என்ற பேச்சுக்கள் எழும்போது, அது தேமுதிகவைப் போன்ற ஒரு கட்சிக்கு மிகப் பெரிய சறுக்கலாகவே அமையும் என்பதில் சந்தேகமில்லை. இது நடக்கும் என கணித்து தான் விஜய பிரபாகரன் திமுக கூட்டணி வேண்டாம் என்றார், ஆனால் பிரேமலதா தான் கேட்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
அரசியல் சதுரங்கத்தில் திமுகவின் இந்த வியூகம் பிரேமலதாவுக்கு ‘பட்டை நாமம்’ போடும் செயலாகவே பலரால் வர்ணிக்கப்படுகிறது. விஜயகாந்த் இருந்த காலத்தில் தேமுதிக ஒரு மாற்று சக்தியாக திகழ்ந்தது. ஆனால், இன்று ஒரு ராஜ்யசபா சீட்டுக்காக மொத்த கட்சியையும் திமுகவிடம் அடகு வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுகிறது. தேர்தல் நெருங்கும்போது திமுக தனது பிடியை இன்னும் இறுக்கும் என்றும், அப்போது தேமுதிகவுக்கு வேறு வழியில்லாமல் போகலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
மொத்தத்தில் பிரேமலதா விஜயகாந்த் இப்போதே சுதாரித்துக் கொண்டு தொகுதிகளை உறுதி செய்யாவிட்டால், தேமுதிகவின் நிலை இன்னும் மோசமடையக்கூடும் என்று கட்சி நிர்வாகிகள் புலம்பி வருவதாக கூறப்படுகிறது.