தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் வியூகங்கள் அரசியல் விமர்சகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளன. ஒரு தேர்ந்த அரசியல் சதுரங்க ஆட்டக்காரரை போல, அவர் தனது காய்களை மிகவும் கவனமாக நகர்த்தி வருகிறார். குறிப்பாக, அதிமுகவின் கோட்டைகளாக கருதப்படும் தொகுதிகளை தன் வசம் வைத்துக்கொண்டு, கட்சி பலவீனமாக இருக்கும் இடங்களை மிகவும் சாதுர்யமாக கூட்டணி கட்சிகளுக்குத் தள்ளிவிட்டிருப்பது அவரது ‘மாஸ்டர் பிளான்’ ஆக பார்க்கப்படுகிறது. பாஜக, அமமுக போன்ற கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் பட்டியலை உற்று நோக்கினால், அவற்றில் பெரும்பாலானவை கடந்த காலங்களில் அதிமுக மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்ற அல்லது செல்வாக்கு குறைந்த இடங்களாகவே இருக்கின்றன.
இந்த தொகுதி பங்கீட்டில் பாஜக மற்றும் அமமுக ஆகிய இரு கட்சிகளுமே எடப்பாடியின் கணக்கில் சற்றே ஏமாந்துவிட்டதாகவே தோன்றுகிறது. தேசிய கட்சியான பாஜக, தங்களுக்கு அதிக இடங்கள் கிடைத்துவிட்டது என்ற உற்சாகத்தில் இருந்தாலும், அந்த இடங்கள் அனைத்தும் வெற்றி வாய்ப்பு கடினமாக இருக்கும் களங்கள் என்பதை அவர்கள் தாமதமாகவே உணருவார்கள் போலிருக்கிறது. அதேபோல், டிடிவி தினகரனின் அமமுகவிற்கு ஒதுக்கப்பட்ட 11 தொகுதிகளும் தென் மாவட்டங்களில் கூட பலத்த சவால்களை சந்திக்க வேண்டிய இடங்களாகும். பெரிய கட்சி, அதிக தொகுதிகள் என்ற பிம்பத்தை உருவாக்குவதற்காக பலவீனமான இடங்களை ஏற்றுக்கொண்டது, இந்த இரு கட்சிகளுக்கும் தேர்தல் முடிவுகளின் போது பெரும் பின்னடைவை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
இருப்பினும், இந்த ‘ஸ்கெட்ச்’ வலைக்குள் சிக்காமல் மிகவும் சாமர்த்தியமாக சுதாரித்து கொண்டது அன்புமணி ராமதாஸின் பாமக மட்டுமே. கடந்த கால அனுபவங்களை வைத்து, தங்களுக்கு செல்வாக்குள்ள வட மாவட்ட தொகுதிகளை பெறுவதில் அன்புமணி மிகவும் பிடிவாதமாக இருந்துள்ளார். 18 தொகுதிகள் மட்டுமே கிடைத்தாலும், அவை அனைத்தும் பாமகவின் வாக்கு வங்கி பலமாக இருக்கும் இடங்கள் என்பதை அவர் உறுதி செய்துள்ளார். மற்ற கூட்டணி கட்சிகள் தொகுதி எண்ணிக்கையில் கவனம் செலுத்தியபோது, பாமக தனது வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கும் இடங்களை மட்டும் குறிவைத்து வாங்கியிருப்பது அவர்களின் அரசியல் முதிர்ச்சியை காட்டுகிறது.
தற்போதைய கள நிலவரப்படி, பாஜக 27 தொகுதிகளில் போட்டியிட்டாலும், அவற்றில் 5 இடங்களில் வெற்றி பெறுவதே அந்த கட்சிக்கு மிகப்பெரிய சாதனையாக இருக்கும். அதிமுகவின் வாக்குகள் முழுமையாக பாஜகவிற்கு மாறுமா என்பதும் ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது. பலமான வேட்பாளர்கள் இல்லாத பல தொகுதிகளில் தாமரை சின்னம் தடம் பதிப்பது என்பது எட்டாக்கனியாகவே தெரிகிறது.
டிடிவி தினகரனின் அமமுக நிலையை பார்த்தால், அது இன்னும் கவலைக்கிடமாகவே உள்ளது. ஒரு காலத்தில் அதிமுகவின் வாக்குகளை பிரிக்கும் சக்தியாக இருந்த அமமுக, இன்று தனது இருப்பை தக்கவைத்துக் கொள்ளவே போராடி வருகிறது. அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 11 தொகுதிகளில் பல இடங்களில் டெபாசிட் பெறுவதே குதிரை கொம்பாக இருக்கும் சூழல் நிலவுகிறது. இதே நிலை நீடித்தால், தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அமமுகவின் சட்டமன்றப் பிரதிநிதித்துவம் என்பது ‘பூஜ்ஜியம்’ என்ற நிலைக்கு தள்ளப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இது தினகரனின் அரசியல் எதிர்காலத்திற்கே ஒரு மிகப்பெரிய சவாலாக அமையும் என்பதில் மாற்று கருத்தில்லை.
மொத்தத்தில் இந்த தேர்தல் முடிவுகள் பல கட்சிகளின் ‘வாக்கு சதவீதம்’ குறித்த போலி பிம்பங்களை உடைத்தெறிய போகிறது. “எங்களுக்கு இவ்வளவு சதவீதம் ஓட்டு இருக்கு, அவ்வளவு செல்வாக்கு இருக்கு” என்று மார்தட்டிக்கொண்டு கூட்டணி பேச்சுவார்த்தைக்கு வரும் கட்சிகளுக்கு எடப்பாடி பழனிசாமி ஒரு பாடம் புகட்டியுள்ளார். “அடுத்த தேர்தலில் எனக்கு இவ்வளவு வாக்கு வங்கி இருக்குன்னு எவனாவது வருவீங்க?” என்று கேட்கும் வகையில், பலவீனமான கட்சிகளின் பலத்தை இந்த தேர்தல் நிரூபித்து காட்டும். உண்மையான செல்வாக்கு யாருக்கு இருக்கிறது என்பதை மக்கள் தீர்ப்பு உறுதி செய்யும் போது, பல ‘லெட்டர் பேட்’ கட்சிகள் காணாமல் போகும் அபாயம் உள்ளது.