தமிழக அரசியல் களம் தற்போது ஒரு நவீன போர்க்களத்தை போல காட்சியளிக்கிறது. மரபுவழி அரசியல் தந்திரங்களுக்கும், கார்ப்பரேட் பாணி வியூகங்களுக்கும் இடையே ஒரு மிகப்பெரிய யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, ஆளுங்கட்சியான திமுக, ஒவ்வொரு தேர்தலையும் ஒரு கார்ப்பரேட் நிறுவனம் கையாளும் விதமாக மிகத் துல்லியமாக அணுகி வருகிறது.
தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் என்ன நடக்கிறது என்பதை நிமிடத்திற்கு நிமிடம் கண்காணிப்பதற்காக ஒரு பெரும் படையையே திமுக தலைமை களமிறக்கியுள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் நிலவும் சாதக, பாதகங்கள், எதிர்க்கட்சிகளின் பலம் மற்றும் பலவீனம், மக்களின் தற்போதைய மனநிலை ஆகியவற்றை உள்ளடக்கிய ‘மினி சர்வே’ ரிப்போர்ட் தினமும் இரவு அறிவாலயத்தில் உள்ள வார் ரூமுக்கு அனுப்பப்படுகிறது.
அங்கிருந்து அந்த தகவல்கள் தொகுக்கப்பட்டு, நேரடியாக முதலமைச்சரின் கைகளுக்கு செல்கின்றன. அதன் அடிப்படையில், மறுநாள் காலையிலேயே சுணக்கமாக இருக்கும் வேட்பாளர்களுக்கும், பிரச்சனையான தொகுதிகளுக்கும் பரபரப்பான உத்தரவுகள் பறக்கின்றன. யாருக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும், எங்கு பிரச்சாரத்தை தீவிரப்படுத்த வேண்டும் என்பதை திமுக தலைமை தரவுகளின் அடிப்படையிலேயே தீர்மானிக்கிறது.
திமுக ஒருபுறம் அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் தினசரி சர்வேக்களை நம்பி தனது காய்களை நகர்த்தினாலும், திமுகவை தனது பிரதான அரசியல் எதிரி என அறிவித்த தமிழக வெற்றி கழகம் இத்தகைய சர்வேக்கள் பற்றி சிறுதும் கவலைப்படாமல் களத்தில் தீயாய் வேலை செய்து வருகிறது. “காசுக்காக சர்வே எடுக்கும் நிறுவனங்கள் அளிக்கும் ரிப்போர்ட்டில் ஒருபோதும் உண்மை இருக்காது. அது செயற்கையானது” என்பது தவெக நிர்வாகிகளின் வாதமாக உள்ளது.
தவெகவினர் சர்வே தொழில்நுட்பத்தை விட தொண்டர்களின் நேரடி தொடர்பையே அதிகம் நம்புகின்றனர். “சர்வே எடுப்பவர்கள் ஒரு குறிப்பிட்ட சதவீத மக்களிடம் மட்டுமே பேசுவார்கள், ஆனால் நாங்கள் ஒவ்வொரு வீதிக்கும் சென்று மக்களின் உண்மையான மனநிலையை நேரில் பார்க்கின்றோம். மக்களின் எழுச்சி என்பது ஒரு ரிப்போர்ட்டில் அடங்கிவிடாது” என்று தவெகவினர் ஆவேசமாக தெரிவிக்கின்றனர்.
மறுபுறம், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும் இந்த முறை சர்வேக்கள் மீது பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை என்பது ஆச்சரியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதற்கு பின்னால் ஒரு கசப்பான கடந்த கால அனுபவம் ஒளிந்திருக்கிறது. கடந்த கால தேர்தல்களில், பல சர்வே நிறுவனங்கள் அதிமுகதான் அமோக வெற்றி பெறும் என்று முடிவுகளை வெளியிட்டு, அக்கட்சியிடம் பெரும் தொகையை சம்பளமாகவும், கமிஷனாகவும் பெற்று ஏமாற்றியதாக கூறப்படுகிறது. அந்த தவறான கணக்கீடுகளால் தேர்தல் களத்தில் அதிமுக பலத்த பின்னடைவை சந்தித்தது. இந்த கசப்பான அனுபவத்தால், எடப்பாடி பழனிசாமி இந்த முறை அத்தகைய நிறுவனங்களை நம்ப தயாராக இல்லை. புள்ளிவிவரங்களை விட தனது சொந்த கட்சியின் கிளை கழக நிர்வாகிகளின் தகவல்களுக்கே அவர் அதிக முக்கியத்துவம் அளிக்கிறார்.
தமிழக அரசியலில் நிலவும் இந்த மூன்று விதமான அணுகுமுறைகளும் 2026 தேர்தலை நோக்கிய பயணத்தை மிகவும் சுவாரஸ்யமாக்கியுள்ளன. திமுகவின் ‘டேட்டா சென்ட்ரிக்’ அரசியல் ஒருபுறம், தவெகவின் ‘மக்கள் எழுச்சி’ அரசியல் மறுபுறம், அதிமுகவின் ‘பாரம்பரிய களப்பணி’ அரசியல் என முக்கோண போட்டி வலுத்துள்ளது. சர்வேக்கள் தரும் முடிவுகள் நிஜமானதா அல்லது களத்தில் மக்கள் காட்டும் எழுச்சி உண்மையானதா என்பது வாக்கு எண்ணிக்கை அன்றே தெரியவரும். தொழில்நுட்பம் வெல்லுமா அல்லது தொண்டர்களின் உழைப்பு வெல்லுமா என்பதை தீர்மானிக்க போகும் இறுதி நடுவர்கள் தமிழக மக்கள்தான்.