தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், உளவுத்துறை சமர்ப்பித்துள்ள ரகசிய அறிக்கை ஆளுங்கட்சியான திமுக மற்றும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக ஆகிய இரு தரப்பிற்குமே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. வழக்கமாகத் தேர்தல் முடிந்தவுடன் தங்களுக்கு சாதகமான முடிவுகள் வரும் என்று நம்பிக்கையுடன் இருக்கும் இரு கட்சிகளின் தலைமைக்கும், இந்த முறை உளவுத்துறை அளித்துள்ள ரிப்போர்ட் அத்தனை உற்சாகமானதாக இல்லை என கூறப்படுகிறது. குறிப்பாக, திராவிட கட்சிகளின் கோட்டைகளாக கருதப்பட்ட பல தொகுதிகளில் இந்த முறை ஒரு “மௌனப் புரட்சி” நடந்திருப்பதை அந்த அறிக்கை சுட்டிக்காட்டுவதாக அரசியல் வட்டாரங்கள் முணுமுணுக்கின்றன.
இந்த தேர்தலின் மிகப்பெரிய ஆச்சரியமாக பார்க்கப்படுவது, பரம்பரை பரம்பரையாக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கு மட்டுமே வாக்களித்து வந்த குடும்பங்களில் ஏற்பட்டுள்ள பிளவுதான். தாத்தா, அப்பா காலத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு விசுவாசமாக இருந்த குடும்பங்களின் வாரிசுகள், இந்த முறை தங்கள் குடும்ப மரபை தாண்டி விஜய்யின் தமிழக வெற்றி கழகத்திற்கு வாக்களித்துள்ளதாக உளவுத்துறை கணித்துள்ளது. “குடும்பத்திற்கு ஒரு ஓட்டு” என்ற இலக்குடன் களம் இறங்கிய விஜய்க்கு, அந்த இலக்கையும் தாண்டி ஒரு குடும்பத்தில் உள்ள மூன்று அல்லது நான்கு வாக்குகள் விழுந்திருப்பதாக தெரிகிறது. இது பாரம்பரிய கட்சிகளின் வாக்கு வங்கியில் ஒரு பெரிய சரிவை ஏற்படுத்தியுள்ளது.
விஜய்யின் திட்டமிடப்பட்ட “சைலன்ட் மூவ்” திராவிட கட்சிகள் எதிர்பார்த்ததை விட அதிக பலனை தந்துள்ளதாக தெரிகிறது. ஆரம்பத்தில் விஜய்யின் வருகையை பொருட்படுத்தாத பழைய தலைமைகள், தற்போது தங்கள் வீட்டு பிள்ளைகளே தங்களுக்கு எதிராக வாக்களித்திருப்பதை உணர்ந்து அதிர்ச்சியில் உள்ளனர். உளவுத்துறை அறிக்கையின்படி, குறிப்பாக நகர்ப்புறம் மட்டுமின்றி ஊரக பகுதிகளிலும் தவெக-வின் வாக்கு சதவீதம் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு உயர்ந்துள்ளது. இது திமுக-அதிமுக ஆகிய இரு துருவ அரசியலை உடைத்து, ஒரு புதிய முக்கோண போட்டியை தமிழகத்தில் அதிகாரப்பூர்வமாக உருவாக்கியுள்ளது.
வாக்காளர்களுக்கு பணமோ அல்லது மற்ற கவர்ச்சிகரமான வாக்குறுதிகளோ வழங்கப்பட்ட போதிலும், அதையெல்லாம் பெற்றுக்கொண்டு வாக்காளர்கள் தங்களுக்கு விருப்பமான மாற்றத்திற்கு வாக்களித்துள்ளதாக தெரிகிறது. “பணம் கொடுத்தவர்களுக்கே ஓட்டு” என்ற பழைய ஃபார்முலா இந்த முறை பல இடங்களில் வேலை செய்யவில்லை என்பதை உளவுத்துறை தரவுகள் கூறுவதாக தெரிகிறதுஇ. குறிப்பாக, ஒரு குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் பழைய கட்சிகளுக்கு ஆதரவாக இருந்தாலும், அதே குடும்பத்தை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பெண்கள் விஜய்யின் புதிய அரசியல் அணுகுமுறைக்கு ஆதரவாக தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். இதுவே “ஒரு குடும்பத்திற்கு 3 ஓட்டு” என்ற கணக்கை விஜய்க்கு சாதகமாக்கியுள்ளது.
இறுதியாக, இந்த உளவுத்துறை அறிக்கை உண்மையானால், வரும் மே 4-ஆம் தேதி வெளியாகவுள்ள தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் ஒரு நிலநடுக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் ஆட்சியை பிடிக்கப் போராடும் வேளையில், விஜய் ஒரு கிங் மேக்கராகவோ அல்லது தனிப்பெரும் சக்தியாகவோ உருவெடுப்பது உறுதி என்று தோன்றுகிறது. ஒரு குடும்பத்தின் வாக்குகள் சிதறி, அது ஒரு புதிய மாற்றத்தை நோக்கி பாய்ந்திருப்பது, தமிழக அரசியல் இனி பழையபடி இருக்கப்போவதில்லை என்பதையே பறைசாற்றுகிறது. இந்த ரகசிய அறிக்கையின் தாக்கம் தேர்தல் முடிவுகளில் எப்படி பிரதிபலிக்கிறது என்பதை பார்க்க ஒட்டுமொத்த மாநிலமும் ஆவலுடன் காத்திருக்கிறது.