latest news
பி.ஐ.எஸ். கிடைச்சாச்சு.. அடுத்து வெளியீடு தான்.. விரைவில் இந்தியா வரும் நத்திங் ஸ்மார்ட்வாட்ச்..!
நத்திங் நிறுவனம் தனது முதல் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்- நத்திங் போன் 2 அறிமுகம் செய்வதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. அடுத்த மாத துவக்கத்திலேயே நத்திங் போன் 2 அறிமுகமாக இருக்கும் நிலையில், நத்திங் நிறுவனத்தின் புதிய சாதனம் பற்றிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மேலும் புதிய சாதனம் பி.ஐ.எஸ். சான்று பெற்று இருக்கிறது.
டிப்ஸ்டரான முகுல் ஷர்மா புதிய நத்திங் சாதனம் பற்றிய தகவலை வெளியிட்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் ‘CMF by Nothing’ எனும் பெயரில் நத்திங் நிறுவனம் டிரேட்மார்க் கோரி விண்ணப்பித்து இருப்பதாக முகுல் ஷர்மா தெரிவித்து இருந்தார். எனினும், இந்த சாதனம் பற்றி வேறு எந்த தகவலும் அப்போது வெளியாகவில்லை.
இந்த நிலையில், தற்போது பி.ஐ.எஸ். சான்று பெற்று இருக்கும் நத்திங் நிறுவன சாதனம் D395 எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இந்த சாதனம் ஸ்மார்ட்வாட்ச் பிரிவில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், நத்திங் நிறுவனம் விரைவில் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்யும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நத்திங் ஸ்மார்ட்வாட்ச் மாடலின் வெளியீடு மட்டும் தற்போது வெளியாகி இருக்கிறது. ஆனால், இது நத்திங் போன் 2 மாடலுடன் அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியான விஷயம் தான். நத்திங் வாட்ச் பற்றி இதுவரை எந்த தகவல்களோ அல்லது டீசர்களோ வெளியாகாததே இதற்கு காரணம் எனலாம்.
முன்னதாக நத்திங் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கார்ல் பெய் ஸ்மார்ட்வாட்ச் சாதனம் பற்றி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து இருந்தார். அதில், ‘ஸ்மார்ட்வாட்ச்கள் பற்றி அறிந்து கொள்ளும் ஆவலுடன் கடந்த ஞாயிறு கிழமை புதிய சாம்சங் கேலக்ஸி வாட்ச் 5 ப்ரோ மாடலை வாங்கினேன். ஆனால், எனக்கு அதை எதற்காக பயன்படுத்த வேண்டும் என்று தெரியவில்லை. தேவையாற்ற பொருளாக எனக்கு உணர்கிறது. நீங்கள் எதற்காக ஸ்மார்ட்வாட்ச்களை பயன்படுத்துகின்றீர்கள்?’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில் தான், நத்திங் நிறுவன ஸ்மார்ட்வாட்ச் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்பு ஸ்மார்ட்வாட்ச் சாதனங்கள் தேவையற்ற ஒன்றாக கூறிய நிலையில், தற்போது பிரான்டு மற்றும் அதன் தலைமை செயல் அதிகாரி தங்களின் மனதை மாற்றிக் கொண்டு இருக்கலாம் அல்லது நத்திங் நிறுவன ஸ்மார்ட்வாட்ச், கேலக்ஸி வாட்ச் 5 ப்ரோ மாடலை விட பனுள்ள அம்சங்களை கொண்டிருக்கும் என்று தெரிகிறது.
நத்திங் நிறுவனம் ஏற்கனவே ஸ்மார்ட்வாட்ச் ஒன்றை உருவாக்கி இருக்கலாம், என்றும் போட்டி நிறுவன மாடல் எத்தகைய அம்சங்களை கொண்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளவே கார்ல் பெய் கேலக்ஸி வாட்ச் 5 ப்ரோ மாடலை வாங்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எதுவாயினும் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் நத்திங் நிறுவனம் புதிதாக ஸ்மார்ட்வாட்ச் சந்தையில் களமிறங்குவது மட்டும் கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது.