automobile
லட்சக்கணக்கில் தள்ளுபடி..! டொயோட்டாவின் தரமான செய்கை! என்ன இப்படி பண்ணிட்டாங்க?
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில், முன்னணி வாகன விற்பனையாளர்கள் அவ்வப்போது அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடி அறிவிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளன. எந்த விதமான முன்னறிவிப்பும் இன்றி அறிவிக்கப்படும் திடீர் சலுகைகள் வாடிக்கையாளர்களுக்கு சில ஆயிரங்களில் இருந்து பல லட்சங்கள் வரை மிச்சப்படுத்துகின்றன.
அந்த வரிசையில், நாடு முழுக்க செயல்பட்டு வரும் டொயோட்டா நிறுவன வாகன விற்பனையாளர்கள் ஹிலக்ஸ் பிக்கப் டிரக் மாடலுக்கு அதிரடி விலை குறைப்பை அறிவித்து, வழங்கி வருகின்றனர். டொயோட்டாவின் ஹிலக்ஸ் மாடலின் இன்றைய விலை ரூ. 30 லட்சத்து 40 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
பிரீமியம் மாடல்கள் பிரிவில் நிலைநிறுத்தப்பட்டு இருக்கும் டொயோட்டா ஹிலக்ஸ் இந்திய சந்தையில் இதுவரை 1300 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இந்தியாவில் இதே பிரிவில் விற்பனைக்கு கிடைக்கும் மற்றொரு பிக்கப் டிரக் மாடல் இசுசு வி கிராஸ் சற்றே குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட டொயோட்டா ஹிலக்ஸ், அப்போது ரூ. 33 லட்சத்து 99 ஆயிரம் என்ற விலையில் விற்பனைக்கு வந்தது. பிறகு விற்பனை தொடங்கி முதலாம் ஆண்டு நிறைவுக்கு பின், டொயோட்டா நிறுவனம் தனது ஹிலக்ஸ் பிக்கப் டிரக் மாடல் விலையை ரூ. 3 லட்சத்து 59 ஆயிரம் வரை குறைப்பதாக அறிவித்தது. இதன் காரணமாக ஹிலக்ஸ் மாடலின் விலை ரூ. 30 லட்சத்து 40 ஆயிரம் என்று மாறியது.
விலை குறைப்பு அறிவிப்பிலேயே, ஹிலக்ஸ் டாப் எண்ட் மாடலை வாங்க திட்டமிட்டோருக்கு டொயோட்டா ஷாக் தகவலை அளித்தது. அதன்படி ஹிலக்ஸ் பேஸ் வேரியண்ட் விலை குறைக்கப்பட்ட நிலையில், டாப் எண்ட் மாடல்களின் விலை தடாலடியாக உயர்த்தப்பட்டது.
அதன்படி ஹிலக்ஸ் டாப் எண்ட் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட வேரியண்ட்-இன் விலை ரூ. 1 லட்சத்து 35 ஆயிரமும், டாப் எண்ட் ஆட்டோமேடிக் மாடல் விலை ரூ. 1 லட்சத்து 10 ஆயிரமும் உயர்த்தியது. விலை உயர்வின் காரணமாக டொயோட்டா ஹிலக்ஸ் டாப் எண்ட் மேனுவல் வேரியண்ட் விலை ரூ. 37 லட்சத்து 15 ஆயிரம் என்றும், ஆட்டோமேடிக் வேரியண்ட் விலை ரூ. 37 லட்சத்து 90 ஆயிரம் என்று மாறியது.
தள்ளுபடி விவரங்கள் :
டொயோட்டா விற்பனையாளர்கள் அளித்து இருக்கும் தகவல்களின் படி டொயோட்டா ஹிலக்ஸ் மாடலுக்கு குறைந்தபட்சமே ரூ. 6 லட்சம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுவது தெரியவந்துள்ளது. சில விற்பனை மையங்கள் ரூ. 8 லட்சம் வரையிலான தள்ளுபடி வழங்குகின்றன. எனினும், தள்ளுபடி தொகை ஹிலக்ஸ் மாடல் மற்றும் வேரியண்டிற்கு ஏற்ப வேறுபடும்.