india
`இதுலயுமா அரசியல்?!’ – குவைத் செல்ல கேரள அமைச்சருக்கு `நோ’ சொன்ன மத்திய அரசு!
குவைத் தீ விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் சொல்வதற்காக அங்கு செல்ல முயன்ற கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜூக்கு மத்திய அரசு அனுமதி மறுத்திருக்கிறது.
குவைத்தின் மங்காஃப் நகரில் உள்ள ஏழு அடுக்கு மாடிக் குடியிருப்பில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் 196 பேர் தங்கியிருந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள். அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 49 பேர் உயிரிழந்தனர். இதில், கேரளாவைச் சேர்ந்த 24 பேர், தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேர் உள்பட 45 பேர் இந்தியர்கள் ஆவர்.
இந்திய விமானப்படை விமானம் மூலம் இந்தியர்களின் உடல் கேரள மாநிலம் கொச்சிக்குக் கொண்டுவரப்பட்டது. அங்கு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் உடல்களைப் பெற அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரில் சென்றிருக்கிறார். அவர்களின் உடல் தனித்தனி ஆம்புலன்ஸ்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டது. கேரளா சார்பில் முதலமைச்சர் பினராயி விஜயன், மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி ஆகியோர் கொச்சி விமான நிலையம் வந்திருந்தனர்.
இந்தநிலையில், குவைத் தீ விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு கேரள அரசு சார்பில் ஆறுதல் கூற அங்கு செல்ல முயன்ற மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் திருப்பி அனுப்பப்பட்டார். அரசு உயர் அதிகாரிகளோ அமைச்சர்களோ வெளிநாடு செல்ல வேண்டும் எனில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் அரசியல் தடை இல்லாச் சான்று பெற வேண்டும் என்கிற நிலையில், அந்த சான்றை அமைச்சர் வீணா ஜார்ஜுக்கு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சகம் வழங்க மறுத்துவிட்டது.
இதேபோல், கடந்த 2018-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பாதிப்பின்போது, வெளிநாட்டில் நிதி திரட்ட கேரள அமைச்சரவைக் குழு செல்ல மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது