Cricket
அட்டவணை விவகாரம் அவங்க தலைவலி.. ரோகித் ஓபன் டாக்
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெறுகிறது. நாளை மறுநாள் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. இந்த நிலையில், போட்டி அட்டவணை இந்திய அணிக்கு சாதகமாக உருவாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே கருத்து மோதல் போன்ற சூழல் உருவானது.
இதனிடையே இன்றிரவு நடைபெறும் அரையிறுதி போட்டியின் போது மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டால், இந்திய அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும். அந்த வகையில், இன்றைய போட்டிக்கு முன் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், போட்டி அட்டவணை குறித்த கேள்விக்கு காட்டமான பதில் அளித்தார்.
இது குறித்த கேள்விக்கு பதில் அளித்த ரோகித் சர்மா, தலைக்கு மேல் இருப்பவை யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை. என்ன நடக்கப்போகிறது என்பது எங்களுக்கு தெரியாது. போட்டி தாமதமாக நடைபெற்று முடிந்தால், நாங்கள் விமானத்தை தவறவிடும் வாய்ப்புகள் உண்டு. ஆனால் அதை பற்றி கவலை இல்லை.
எங்களை அடுத்த களத்திற்கு அழைத்து செல்ல வேண்டிய தலைவலி ஐ.சி.சி. மற்றும் கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ் மட்டுமே ஏற்க வேண்டும். எங்களின் முழு கவனம் போட்டியில் எப்படி சிறப்பாக விளையாடி எங்களுக்கு சாதகமான முடிவை பெற வேண்டும் என்பதில் மட்டும் தான் உள்ளது. இறுதியில் இரண்டு தலைசிறந்த அணிகள் மோத உள்ளதால், இது சிறப்பான போட்டியாகவே இருக்கும் என்று தெரிவித்தார்.