india
ரூ.60 லட்சத்துக்காக பிச்சைக்காரர் கொலை… 17 வருடத்துக்குப் பின் வெளிவந்த மர்மம்!
காப்பீட்டுப் பணம் ரூ.60 லட்சத்துக்காக பிச்சைக்காரர் கொலை செய்யப்பட்ட சம்பவம் 17 ஆண்டுகளுக்குப் பின் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் கடந்த 2006-ம் ஆண்டு ஜூலை 30-ல் ஒரு கார் விபத்து நடக்கிறது. அந்த கார் விஜய்பால் சிங் என்பவரின் மகன் அணில் சிங் என்பவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது. விபத்தில் காரை ஒட்டிவந்த அணில் உயிரிழந்ததாக போலீஸில் சொல்லப்படுகிறது.
விஜய்பாலின் குடும்ப நண்பரான ரம்வீர் சிங்கும் அணில் சிங்கின் உடலை அடையாளம் காட்டவேம் காப்பீட்டுத் தொகையான ரூ.60 லட்சம் அவரின் குடும்பத்தினரிடம் அளிக்கப்படுகிறது.
இதுகுறித்த விசாரணையில் தற்போது அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இன்சூரன்ஸ் பணத்த்துக்காக பிச்சைக்காரர் ஒருவருக்குத் தனது ஆடைகளை அணிவித்து, அவரை அணில் சிங் காரோடு சேர்த்து எரித்துக் கொன்றது அம்பலமானது. அகமதாபாத் குற்றவியல் போலீஸார் விசாரணையில், இறந்ததாக நம்பப்பட்ட அணில் சிங் கைது செய்யப்படுகிறார்.
இதையடுத்து, அவருக்கு உடந்தையாக இருந்த 62 வயதான ரம்வீர் சிங்கையும் ஜிபி நகர் போலீஸார் கைது செய்தனர். தான் இறந்ததாக போலியாக நம்பவைத்து இறப்பு சான்றிதழ் பெற்று காப்பீட்டு நிறுவனத்தை அணில் ஏமாற்றியிருப்பதை போலீஸார் உறுதி செய்ததை அடுத்து 17 ஆண்டுகளுக்குப் பின் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.