latest news
கொட்டி தீர்த்த கனமழை… குளு குளுவென மாறிய சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்…!
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் கனமழை கொட்டி தீர்த்ததால் தற்போது சூழல் குளிர்ச்சியாக மாறியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. அதிலும் சென்னையில் கடந்த 3 நாட்களாக மாலைப் பொழுதுகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகின்றது. மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தொடர்ந்து தமிழகத்திலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதியிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகின்றது.
ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இன்று மாலை 4 மணி அளவில் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பரவலாக மழை பெய்ய தொடங்கியது. சென்னையில் கோயம்பேடு, வடபழனி, பூந்தமல்லி, நுங்கம்பாக்கம், அண்ணா சாலை, தேனாம்பேட்டை, வள்ளுவர் கோட்டம், கோடம்பாக்கம், ஆவடி, பட்டாபிராம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் சென்னையில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது.