tech news
ஐபோன் மட்டும் பயன்படுத்துங்க.. மைக்ரோசாப்ட் உத்தரவால் ஆடிப்போன ஊழியர்கள்
உலகின் முன்னணி மென்பொருள் தயாரிப்பு நிறுவனம் மைக்ரோசாப்ட். பல்வேறு நாடுகளில் அலுவலகங்களை வைத்திருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பல்லாயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், சீனாவில் உள்ள மைக்ரோசாப்ட் நிறுவன ஊழியர்கள் ஐபோன் மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று அந்நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான தகவலை மைக்ரோசாப்ட் மின்னஞ்சல் மூலம் ஊழியர்களுக்கு தெரியப்படுத்தி இருக்கிறது. வருகிற செப்டம்பர் 1 ஆம் தேதியில் இருந்து சீன அலுவலகங்களில் பணியாற்றும் மைக்ரோசாப்ட் ஊழியர்கள் அலுவல் பயன்பாட்டிற்கு ஐபோன் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சீனாவில் கூகுள் பிளே சேவைகள் இல்லாததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதோடு செக்யூரிட்டி மாற்றங்களும் இந்த முடிவுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. சீனாவில் கூகுள் மொபைல் சேவைகள் கிடைப்பதில்லை என்பதால், நாங்கள் ஊழியர்களிடம் ஐஓஎஸ் சாதனத்தை பயன்படுத்த வலியுறுத்தி இருக்கிறோம் என்று மைக்ரோசாப்ட் செய்தி தொடர்பாளர் தெரிவித்ததாக தெரிகிறது.
ஆப் ஸ்டோர் மட்டுமின்றி அதிகரித்து வரும் சைபர்செக்யூரிட்டி பிரச்சினைகளை எதிர்கொள்ளவும் மைக்ரோசாப்ட் இந்த நடவடிக்கையை எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட காலக்கட்டத்திற்குள் ஐபோன் வாங்க முடியாதவர்களுக்கு நிறுவனம் சார்பில் ஐபோன் 15 வழங்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வைத்திருப்போர் புதிய சாதனங்களை பெற்றுக் கொள்ள ஏதுவாக சீன அலுவலகங்களில் கலெக்ஷன் பாயின்ட்கள் அமைக்கப்படுகிறது.