Cricket
IPL2025: தோனி ரீபிளேஸ்மெண்ட்… சிஎஸ்கேவில் இணைகிறாரா ரிஷப் பண்ட்?!
ஐபிஎல் 2025 தொடருக்கு முன்பாக நடக்க இருக்கும் மிகப்பெரிய மாற்றமாக சிஎஸ்கே அணியில் தோனிக்கு மாற்றுவீரராக ரிஷப் பண்டைக் கொண்டுவர அந்த அணி நிர்வாகம் திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
2025 ஐபிஎல் தொடருக்கான முன்னேற்பாடுகள் தொடங்கப்பட்டுவிட்டன. குறிப்பாக, வீரர்களைத் தக்க வைக்கவைப்பது குறித்து அணி உரிமையாளர்களுடன் பிசிசிஐ தரப்பில் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக எத்தனை வீரர்களை ஒவ்வொரு அணியும் தக்க வைத்துக் கொள்ளலாம் என்பது பற்றி தீவிர விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
ஐபிஎல் அணி நிர்வாகங்களும் நீண்டகால அடிப்படையில் புதிய அணிகளைக் கட்டமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. சிஎஸ்கேவைப் பொறுத்தவரை, தோனிக்கு மாற்றுவீரரைக் கொண்டுவருவது அந்த அணி நிர்வாகத்துக்கு மிகப்பெரிய தலைவலியாக மாறியிருக்கிறது. 2025 சீசனோடு தோனி விடைபெறுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அவர் ஓய்வுபெறும் முன்னர் புதிய வீரரை அணிக்குள் கொண்டுவர நினைக்கிறது சிஎஸ்கே நிர்வாகம்.
அதேநேரம், தோனிக்குப் பதிலாக ருதுராஜை ஏற்கனவே கேப்டனாக அந்த அணி போன சீசனில் நியமித்திருந்தது. அந்த சீசனில் விளையாடிய 7 போட்டிகளில் வெற்றியும் அதே எண்ணிக்கையிலான போட்டிகளில் தோல்வியையும் சந்தித்திருந்தாலும், பிளே ஆஃபுக்குத் தகுதிபெறவில்லை.
தோனி கேப்டன்சிக்கு மாற்றாக அவர் இருக்கும் நிலையில், புதிய கீப்பரைத் தேடும் பணியில் சிஎஸ்கே இருக்கிறது. இந்தநிலையில், தோனிக்கு மாற்றாக விக்கெட் கீப்பராக டெல்லி கேப்டனான ரிஷப் பண்டைக் கொண்டுவர திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
இன்னொருபக்கம், ரிஷப் பண்ட் கேப்டன்ஷிப்பில் டெல்லி கேப்பிடல்ஸ் நிர்வாகத்துக்குத் திருப்தியில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இரண்டு தகவல்களும் உண்மை எனும் பட்சத்தில் 2025 ஐபிஎல் சீசனில் ரிஷப் பண்டை வரவேற்க யெல்லோ ஆர்மி ரசிகர்கள் தயாராகி வருகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.