india
ஆஜரான ராகுல் காந்தி…அடுத்த மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட விசாரணை…
நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சுல்தான்பூர் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார். இதனை அடுத்து இந்த வழக்கின் மீதான விசாரணையை அடுத்த மாதம் பன்னிரெண்டாம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டது நீதிமன்றம்.
கர்நாடக மாநிலத்தில் கடந்த 2018ம் ஆண்டு சட்டசபைக்கான தேர்தல் நடைபெற்றது. அப்போது காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார் ராகுல் காந்தி. பிரச்சாரத்தின் போது உள்துறை அமைச்சர் அமீத்ஷாவை கொலை வழக்கின் குற்றவாளி என சொல்லியிருந்தார். இவரது இந்த கருத்து தொடர்பாக உத்திர பிரதேச பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் விஜய் மிஸ்ரா சுல்தான்பூர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது வழக்கு தொடர்ந்தார்.
2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் ராகுல் காந்திக்கு பிடி வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது கோர்ட். இதனால் கடந்த பிப்ரவரி மாதம் இருபதாம் தேதி சுல்தான்பூர் எம்.பி., எம்.எல்.ஏக்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார் ராகுல் காந்தி. அதனைத் தொடர்ந்து ஜாமீன் கோரியிருந்தார் ராகுல் காந்தி. அவரின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. அதே போல் ஜுலை இருபத்தி ஆறாம் தேதியான இன்றைய தினம் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் ராகுலுக்கு உத்தரவிட்டிருந்தது.
கோர்ட் உத்தரவின் படி இன்று சுல்தான்பூர் எம்.பி., எம்.எல்.ஏக்கள் நீதி மன்றத்தில் நேரில் ஆஜரானார் ராகுல் காந்தி. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் மீதான விசாரணையை அடுத்த மாதம் (ஆகஸ்ட் ) பன்னிரெண்டாம் தேதிக்கு ஒத்திவைத்து. அன்றைய தினம் ராகுல் காந்தி நேரில் ஆஜராகத் தேவையில்லை என சொல்லியுள்ளதாக கோர்ட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.