10 விக்கெட் வீழ்த்தியவரின் எமோஷனல் மறுப்பக்கம்… வெற்றியை புற்றுநோய் பாதித்த சகோதரிக்கு சமர்பித்த ஆகாஷ் தீப்

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வரலாற்று வெற்றி பெற்று அசத்தியது. எட்ஜ்பாஸ்டனில் நடந்த இந்தப் போட்டியில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி வெற்றிக்கு வேகப்பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப் மிகப்பெரிய காரணியாக விளங்கினார். முதல் இன்னிங்ஸில் சிறப்பாக பந்துவீசிய ஆகாஷ் தாப் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்,

தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸிலும் ஆக்ரோஷமாக பந்துவீசிய ஆகாஷ் தீப் இந்த முறை 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் ஒரு டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆகாஷ் தீப் அனைவரின் கவனத்தை தன்பக்கம் ஈர்த்துள்ளார். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பான பந்துவீச்சை பதிவு செய்த ஆகாஷ் தீப் வெற்றிக்கு பின் அளித்த பேட்டியில் எமோஷனலாக பேசினார்.

அப்போது, “ஒவ்வொரு முறை என் கைகளில் பந்து இருக்கும் போதும் சகோதரியின் நினைப்பு என் மனதில் நிச்சயம் வந்து செல்லும். இதுவரை இந்த விஷயத்தை நான் யாரிடமும் சொன்னதில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்பு என் சகோதரிக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அவர் எனது ஆட்டத்தை பார்த்து நிச்சயம் மகிழ்ச்சியை ஏற்படுத்தும், அவள் முத்தில் மீண்டும் புன்னகை பூக்கும்,” என்றார்.

தொடரந்து பேசிய ஆகாஷ் தீப், “ஒவ்வொரு முறை நான் பந்தை கையில் எடுக்கும் போது, அவரை பற்றிய நினைவுகள் மற்றும் அவரது படம் என் மனதில் தோன்றும். இந்த ஆட்டத்தை நான் அவருக்கு சமர்பிக்கிறேன். சகோதரி நாங்கள் அனைவரும் உன்னுடன் தான் இருக்கிறோம் என்று அவளிடம் கூற விரும்புகிறேன்,” என்றார்.

ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகள் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. மேலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி நடந்த எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இந்திய அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த வெற்றி மூலம் இங்கிலாந்து நாட்டின் எட்ஜ்ஸ்பாஸ்டனில் நடந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற முதல் ஆசிய கேப்டன் என்ற பெருமையை சுப்மன் கில் பெற்றிருகிறார்.

Leave a Comment