அடுத்த போட்டியில் ஆடுவேனா தெரியாது – இங்கிலாந்தை சுருட்டிய பந்துவீச்சாளர் ஆதங்கம்

இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பரபரப்பான நிலையை எட்டியுள்ளது. பர்மிங்காமில் நடைபெறும் இந்தப் போட்டியில் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. முதல் இன்னிங்ஸில் 587 ரன்களை குவித்த இந்தியா அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியை 407 ரன்களில் சுருட்டியது.

இதன் மூலம் 187 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி ஆடி வருகிறது. நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 244 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய வேகப்பந்துவீ்ச்சாளர் ஆகாஷ் தீப் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு மாற்றாக களமிறங்கிய ஆகாஷ் தீப் இந்திய அணிக்கு தேவையான இடைவெளியில் விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

தொடக்கம் முதலே அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஆகாஷ் தீப் இங்கிலாந்து அணி துவக்க வீரர்களை ரன் அடிக்க விடாமல் பெவிலியன் அனுப்பினார். சிறப்பாக பந்துவீசிய போதும் அடுத்த டெஸ்ட் போட்டியில் நான் விளையாடுவது சந்தேகம் தான் என்று ஆகாஷ் தீப் கூறியிருப்பது ரசிகர்களை கவலை அடைய செய்துள்ளது.

இது தொடர்பாக பேசிய ஆகாஷ் தீப், “இந்த போட்டியில் இன்னும் இரண்டு நாட்கள் தான் உள்ளன. இந்தப் போட்டி வெற்றி பெறுவதற்கு எங்களுக்கு மிகமுக்கியமான ஒன்றாகும். தற்போது நான் மூன்றாவது டெஸ்ட் போட்டி பற்றி நினைப்பதில்லை. இந்த போட்டியின் கடைசி இரண்டு நாட்கள் என் முழு திறனையும் கொடுக்க வேண்டும் என்று மட்டும் தான் நினைக்கிறேன். இதற்கு பிறகு தான் மற்ற விஷயங்களை பற்றி சிந்திப்பேன்.”

“நான் விளையாடுவேனா என்பது பற்றி அணி நிர்வாகம் தான் முடிவு செய்யும். அது அப்படி இல்லை. நான் விளையாடுவேனா என்பது எனக்கே தெரியாது. அணி நிர்வாகம் தான் இதுப்பற்றி முடிவு எடுக்கும். எங்களுக்கு போட்டிக்கு முந்தைய நாள் தான் இது தெரியவரும்.”

“என்னை பொருத்தவரை அணிக்கு எப்போது நான் தேவையோ, அதற்கு நான் என்னை தயார்படுத்திக் கொண்டு, போட்டிக்கு தயாராக இருக்க வேண்டும். கிடைக்கும் நேரத்தில் நான் பயிற்சி எடுத்துக் கொள்வேன். மேலும், எப்போது வாய்ப்பு கிடைத்தாலும், நான் அதனை பயன்படுத்திக் கொள்வதற்கு ஏற்றவாரு முழுமனதுடன் விளையாடுவேன்,” என்று கூறினார்.

Leave a Comment