ஆர்.சி.பி. அணி கோப்பையை வென்ற கொண்டாட்டத்தின் போது 11 பேர் உயிரிழந்ததற்கு பொறுப்பேற்கும் வகையில் கர்நாடக மாநில கிரிக்கெட் கூட்டமைப்பின் செயலாளர் ஏ சங்கர், பொருளாளர் இ.எஸ். ஜெய்ராம் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் அளித்த ராஜினாமா கடிதத்தில் ஜூன் 4-ம் தேதி சின்னசாமி மைதானம் அருகில் நடைபெற்ற கூட்ட நெரிசலுக்கு மனதார பொறுப்பேற்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடங்கியதில் இருந்து முதல் முறையாக ஆர்.சி.பி. அணி இந்த முறை சாம்பியன் கோப்பையை வென்று அசத்தியது. 18 ஆண்டுகால எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் ஆர்.சி.பி. கோப்பை வென்றதை கொண்டாட ரசிகர்கள் சின்னசாமி மைதனம் அருகில் ஒன்றுகூடினர். கொண்டாட்டத்தில் ஆர்.சி.பி. அணியிரும் கலந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
எனினும், கூட்டத்தை கட்டுப்படுத்த முறையான நடவடிக்கைகள் செய்யப்படாததை அடுத்து சின்னசாமி மைதானம் அருகில் கூட்ட நெரிசல் கட்டுக்கடங்காமல் போனது. இதன் காரணமாக அங்கு ஏற்பட்ட தள்ளுமுள்ளு மற்றும் கடும் நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் கடும் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாகத் தான் தற்போது இருவரின் ராஜினாமா அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இது குறித்து இருவர் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “கடந்த இரு தினங்களில் அரங்கேறிய எதிர்பாராத சம்பவங்களில் எங்களின் பங்கு மிகவும் குறைவு தான் என்ற போதிலும், இதற்கு மனதார பொறுப்பேற்கும் வகையில் நாங்கள் செயலாளர் மற்றும் பொருளாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதற்கான கடிதங்களை நேற்றிரவு வழங்கிவிட்டோம். கர்நாடக மாநில கிரிக்கெட் கூட்டமைப்பின் செயலாளர் மற்றும் பொருளாளர் பதவியில் இருந்து நாங்கள் ராஜினாமா செய்வதாக 6.6.25 அன்று கர்நாடக மாநில கிரிக்கெட் கூட்டமைப்பின் தலைவருக்கு கடிதம் அளித்துவிட்டோம். இது நீங்கள் அறிந்து கொள்வதற்கான அறிவிப்பு. ஏ. சங்கர் இ.எஸ். ஜெய்ராம்,” என்று குறிப்பிட்டுள்ளனர்.
முன்னதாக ஐ.பி.எல். சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சின்னசாமி மைதானம் அருகில் வெற்றி கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள வந்து, கூட்ட நெரிசலில் உயிரிழந்த 11 ரசிகர்களின் குடும்பத்தாருக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என அறிவித்தது. விராட் கோலி மற்றும் ஆர்.சி.பி. அணியின் வெற்றி கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள அன்று லட்சக்கணக்கான ரசிகர்கள் சின்னசாமி மைதானம் அருகில் ஒன்றுகூடினர்.