Cricket
முடிந்தவரை விளையாடுவேன்.. குட் நியூஸ் கொடுத்த கேன் வில்லியம்சன்
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த உலகக் கோப்பை தொடரில் அதிசயிக்க வைக்கும் வகையில் உலகின் முன்னணி அணிகள் லீக் சுற்று போட்டிகளோடு தொடரில் இருந்து வெளியேறிவிட்டன. இதில் நியூசிலாந்து அணியும் ஒன்று. உலகக் கோப்பை தொடரில் எதிர்பார்த்த முடிவு கிடைக்காததை அடுத்து, அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
மேலும், 2024-2025 ஆண்டுக்கான நியூசிலாந்து அணி வீரர்களுக்கான மத்திய ஒப்பந்தத்தில் இருந்து விலகிக் கொள்வதாகவும் அறிவித்தார். இவரது அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கேன் வில்லியம்சன் முடிவு குறித்து அந்நாட்டு கிரிக்கெட் வாரிய அதிகாரி ஸ்காட் வீனின்க் கூறும் போது, 2028 வரையிலேனும் கேன் வில்லியம்சன் சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாட வேண்டும். 2028 டி20 உலகக் கோப்பை தொடரை நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இணைந்து நடத்துகின்றன. கேன் வில்லியம்சன் விரும்பினால், அவர் 12 மாதங்களுக்கும் மத்திய ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய கேன் வில்லியம்சன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நியூசிலாந்துக்காக விளையாடுவதே எனக்கு இப்போதும் முக்கியத்துவம் வாய்ந்தது. என்னால் முடிந்த வரை நீண்ட காலம் விளையாட வேண்டும் என்றே விரும்புகிறேன்.”
“நியூசிலாந்துக்காக விளையாடுவதை நான் விரும்புகிறேன். கேப்டனாக எனது பதவிக்காலத்தில் நான் மகிழ்ச்சியான நேரங்களை கடந்துவந்துள்ளேன். இதையே இன்னும் சில ஆண்டுகளுக்கு செய்வது எனக்கு பெருமையான விஷயம். அணியில் ஒரு அங்கமாக இருப்பது எனக்கு மிகவும் நெருக்கமான ஒன்றாகும். இந்த குழுவுடன் இருப்பது அணிக்கு சாதகமாக இருக்கும்வரை, என்னால் முடிந்தவரை நீண்டகாலத்திற்கு இருக்கவே விரும்புகிறேன்,” என்று தெரிவித்தார்.
இதே தொடரில் இருந்து நியூசிலாந்து மற்றொரு வீரரான டிரெண்ட் பௌல்ட் இதுவே தனது கடைசி உலகக் கோப்பை தொடர் என்று அறிவித்தார். இவர்களின் வரிசையில் மற்றொரு நியூசிலாந்து வீரர் லாக்கி ஃபெர்குசனும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.