Cricket
அந்த இன்னிங்ஸ் டோனி ஸ்டைலில் இருந்தது.. ஹர்திக் பான்டியாவை புகழந்த முன்னாள் வீரர்..!
வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் தொடர் வெற்றியை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு ஹர்திக் பான்டியா கேப்டன் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஹர்திக் பான்டியா தலைமையிலான இந்திய அணி தோல்வியை தழுவி இருந்தது.
எனினும், மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் ஹர்திக் பான்டியா தலைமையிலான இந்திய அணி இரு மாற்றங்களுடன் களமிறங்கியது. இந்த போட்டியில் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 200 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, ஒருநாள் தொடரை கைப்பற்றி அசத்தியது. இந்திய அணியின் துவக்க வீரர்கள் சுப்மன் கில் மற்றும் இஷான் கிஷன் முறையே 85 மற்றும் 77 ரன்களை விளாசினர்.
இவர்களை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பான்டியா அதிரடியாக ஆடி 70 ரன்களை விளாசி, அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார். இதன் மூலம் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட்கள் இழப்புக்கு 351 ரன்களை விளாசினார். பிறகு களமிறங்கிய வெஸ்ட் இன்டீஸ் அணி 151 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
கடந்த சில போட்டிகளில் ரன் குவிக்க தடுமாற்றம் காட்டிய ஹர்திக் பான்டியா மூன்றாவது ஒருநாள் போட்டியில் 52 பந்துகளில் 70 ரன்களை எடுத்தார். இதில் ஐந்து சிக்சர்களும், நான்கு பவுன்டரிகளும் அடங்கும். ஹர்திக் பான்டியா இன்னிங்ஸ் குறித்து, இந்திய அணி பேட்டர், ஹனுமா விகாரி கருத்து தெரிவித்து இருக்கிறார். இது குறித்து அவர் கூறியதாவது..,
“அது எம்.எஸ். டோனி விளையாடுவதை போன்ற இன்னிங்ஸ் ஆக இருந்தது. துவக்கத்தில் அவர் சிறிது நேரம் எடுத்துக் கொண்டார். எம்.எஸ். டோனி வழக்கமாக களமிறங்கும் போது இவ்வாறு செய்வதுண்டு. அவர் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடிய போது, இந்த மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டார் என்று தெரிகிறது. அவர் சில சமயங்களில் 4 அல்லது 3 ஆவது வீரராக களமிறங்கி இருக்கிறார். அவர் பொறுப்பை தன்மீது எடுத்துக் கொள்ள நினைத்திருக்கிறார். அதனை மூன்றாவது ஒருநாள் போட்டியில் உணர முடிந்தது.”
“அவர் தனது இன்னிங்ஸ்-ஐ சிறப்பாக கட்டுப்படுத்திக் கொண்டிருந்தார். ஹர்திக் பான்டியா கடந்த சில ஆண்டுகளில், சிறப்பாக வளர்ந்து வந்துள்ளார். அவர் பொறுப்பை ஏற்றுக் கொள்ள விரும்புகிறார். அவர் தற்போது மூத்த வீரர் ஆகிவிட்டார். அவர் இந்திய ஒருநாள் அணியின் துணை கேப்டன். அவர் பொறுப்பை ஏற்றுக் கொள்வதை பார்க்க சிறப்பாக இருக்கிறது,” என்று தெரிவித்து இருக்கிறார்.