இந்திய ODI அணியின் புதிய கேப்டன்… பந்தயத்தில் சூப்பர் என்ட்ரி கொடுத்த ஐ.பி.எல். சென்சேஷன்

ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் தலைசிறந்த வீரர்களில் ஒருவர் ஸ்ரேயஸ் அய்யர். சமீபத்தில் நடந்து முடிந்த ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட ஸ்ரேயஸ் அய்யர் தனது அணியை இறுதிப் போட்டி வரை அழைத்து சென்றார். இறுதிப் போட்டியில் பெங்களூரு அணியை எதிர்கொண்ட பஞ்சாப் அணி 6 ரன்களில் கோப்பையை தவறவிட்டது.

இந்த நிலையில், ஐ.பி.எல். தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயஸ் அய்யர் இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக தேர்வு செய்வதற்கான பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட ஸ்ரேயஸ் அய்யர் அந்த அணிக்கு கோப்பையை வென்றுக் கொடுத்த போதிலும், கவுதம் கம்பீர் வழிகாட்டுதலில் தான் கொல்கத்தா அணி கோப்பையை வென்றதாக பெரிதும் பேசப்பட்டது.

இதனிடையே 2025 ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமை பொறுப்பை ஏற்றுக் கொண்ட ஸ்ரேயஸ் அய்யர் மீண்டும் தனது கேப்டன்சியை நிரூபித்து காட்டியுள்ளார். தற்போது இந்திய டெஸ்ட் அணிக்கு சுப்மன் கில், ஒருநாள் அணிக்கு ரோகித் சர்மா, டி20 அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டன்களாக செயல்படுகின்றனர். மூன்று வகை அணிகளுக்கு தனித்தனி கேப்டன் என்றிருக்கும் தற்போதைய நடைமுறை நீண்ட காலத்திற்கு சரிப்பட்டு வராது என கூறப்படுகிறது. இதன் காரணமாக அடுத்த சில ஆண்டுகளில் வெள்ளை பந்து மற்றும் சிவப்பு பந்து அணிக்கு தலா ஒரு கேப்டன் என்ற முறை கொண்டுவரப்படும் என தெரிகிறது.

கேப்டன்சி விவகாரம் தொடர்பாக தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியின் படி பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர், “தற்போது அவர் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறார். எனினும், ஐ.பி.எல். தொடருக்கு பின் அவரை டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஒதுக்கி வைக்க முடியாது. மேலும், அவர் தற்போது வெள்ளை பந்து அணிக்கான கேப்டன்சி பந்தயத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்துவிட்டார்,” என கூறியுள்ளார்.

தற்போதைய இந்திய அணி கேப்டனாக ரோகித் சர்மா செயல்பட்டு வரும் நிலையில், அவர் தனது ஓய்வு குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. எனினும், சமீபத்தில் அவர் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். ஒருவேளை அவர் ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வு அறிவிக்கும் பட்சத்தில் அவரது இடத்தில் ஸ்ரேயஸ் அய்யர் இந்திய அணி கேப்டனாக அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

Leave a Comment