2வது டெஸ்டில் பும்ராவுக்கு ஓய்வு? இந்திய அணிக்கு அடுத்த சிக்கல்

இந்திய அணியின் முன்னணி பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என்று தகவல் வெளியாகி உள்ளது. எட்ஜ்பாஸ்டனில் இன்னும் சில தினங்களில் தொடங்க இருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. அதிக பணி சுமை காரணமாக இந்த முடிவு எடுக்கப்படுவதாக தெரிகிறது.

காயம் காரணமாக நீண்ட காலம் டெஸ்ட் போட்டிகளில் விளையாடாமல் இருந்த பும்ரா இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார். முதல் இன்னிங்ஸில் 24.4 ஓவர்களை வீசிய பும்ரா ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் இதுவரை 14 முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

பும்ரா சிறப்பாக பந்துவீசிய போதிலும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இரண்டாவது இன்னிங்ஸில் மற்ற பந்துவீச்சாளர்கள் விக்கெட் எடுக்க தவறியது மற்றும் மோசமான ஃபீல்டிங் தான் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. பும்ரா மட்டும் சிறப்பாக பந்துவீசிய நிலையில், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ் மற்றும் ஷர்துல் தாக்கூர் தொடர்ச்சியாக விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறினர்.

முதல் போட்டியில் மட்டும் பும்ரா பந்துவீச்சில் மூன்று கேட்ச்கள் தவறவிடப்பட்டன. முதல் போட்டியில் தோல்வியை தழுவிய போதிலும், பும்ராவின் உடல்நிலை விவகாரத்தில் இந்திய அணி கவனமாக செயல்பட்டு முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. முன்னதாக இந்த தொடர் தொடங்கும் முன்பே பும்ரா அனைத்து போட்டிகளிலும் விளையாட வாய்ப்பில்லை என்று தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கூறியிருந்தார்.

சிறப்பாக பந்துவீசிய பும்ரா இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இடம்பெறாத பட்சத்தில் அது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். மேலும், பும்ராவுக்கு பதிலாக இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங் அல்லது குல்தீப் யாதவ் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment