இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. எட்பக்ஸ்டனில் நடக்கும் இந்தப் போட்டிக்கான இந்திய அணியில் குல்தீப் யாதவ் இடம்பெறுவார் என்று அதிகம் பேசப்பட்டது. எனினும், இதுபற்றிய இறுதி முடிவு எடுக்கப்பட்டதா என்றும் தெரியவில்லை. இந்த நிலையில், குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்பட வேண்டும் என்று முன்னாள் வீரர் முகமது கைஃப் வலியுறுத்தியுள்ளார்.
சமீபத்திய போட்டிகளில் குல்தீப் யாதவ் அதிரடி செயல்பாடுகளை வைத்து பார்க்கும் போது அவரை மீறி வேறொரு வீரரை தேர்வு செய்ய பரிசீலனை செய்வதில் நியாயம் இருக்க முடியாது என்று கைஃப் தெரிவித்தார். இடது கை சுழற்பந்துவீச்சாளரான குல்தீப் பந்துவீச்சில் வித்தியாசங்களை வெளிப்படுத்தக்கூடியவர். எனினும், இவரால் இன்றும் அணியில் நிரந்தர இடம்பிடிக்க முடியவில்லை.
இதுவரை குல்தீப் யாதவ்-க்கு பதிலாக இந்திய அணி அஷ்வினை முதன்மை தேர்வாக கருதியது. அஷ்வினுக்கு இடம் கொடுப்பதற்காகவே குல்தீப் யாதவ் அணியில் இடம்பிடிக்க முடியாத சூழல் இருந்துவந்தது. கடந்த 2017-ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான குல்தீப் யாதவ் இதுவரை இந்திய அணிக்காக 13 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார். இதில் அவர் 37.3 எனும் ஸ்டிரைக் ரேட்டில் 56 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.
குல்தீப் யாதவ்-க்கு பதிலாக அஷ்வின் தான் தேர்வு செய்யப்பட்டு வந்தார். தற்போது அவர் ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கேப்டன் சுப்மன் கில் இவரை தேர்வு செய்ய வேண்டும் என்ற குரல் ஒலிக்கிறது.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கைஃப், “இரண்டாவது டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவ் இடம்பெறவில்லை என்றால் அதில் நியாயம் இல்லை. அவர் 8 ஆண்டுகளில் வெறும் 13 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளஐயாடி இருக்கிறார். முன்னதாக அவருக்கு பதிலாக அஷ்வின் தேர்வு செய்யப்பட்டார், தற்போது அவரை தேர்வு செய்யாததற்கு என்ன காரணம் சொல்லி நியாயப்படுத்துவீர்கள்,” என்று கூறியுள்ளார்.