Cricket
தலைமை பயிற்சியாளர் டிராவிட்.. RR-ஐ இனி அசைக்கவே முடியாது..!
இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஐபிஎல் கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. பல ஆண்டுகால ஒப்பந்தத்தின் அடிப்படையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைந்துள்ள ராகுல் டிராவிட் அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட இருக்கிறார்.
கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகிக் கொண்ட ராகுல் டிராவிட் இனி ஐபிஎல் கிரிக்கெட்டில் தலைமை பயிற்சியாளராக பணியை தொடங்க இருக்கிறார். 2011 ஆம் ஆண்டு துவங்கி 2015 வரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ராகுல் டிராவிட் செயல்பட்டுள்ளார்.
தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில், ராகுல் டிராவிட் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக பணியை துவங்கியுள்ளார். இவர் ராஜஸ்தான் அணியின் இயக்குநர் குமார் சங்கக்காராவுடன் இணைந்து அணியில் ஒட்டுமொத்த கிரிக்கெட் யுத்திகளை உருவாக்குவது மற்றும் அணிக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி வழிநடத்த இருக்கிறார்.
2014 ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளராக பணியாற்றி உள்ள ராகுல் டிராவிட் இந்தியா அண்டர் 19, தேசிய கிரிக்கெட் அகாடமி என பலநிலைகளில் இந்திய கிரிக்கெட்டை சுற்றி பயணித்துள்ளார். பயிற்சியாளராக நீண்ட அனுபவம் கொண்டுள்ளதோடு, சர்வதேச கிரிக்கெட்டில் ஆளுமை மிக்க வீரராகவும் ராகுல் டிராவிட் பார்க்கப்படுகிறார்.
“அவரது தலைசிறந்த பயிற்சியளிக்கும் திறன், இந்திய அணியை அவர் வழிநடத்தியதில் இருந்தே தெளிவாக பார்க்க முடிகிறது. அவருக்கும் அணிக்கும் இடையில் நீண்டகால உறவு இருப்பதை, அவருடனான உரையாடல்களில் நாங்கள் பார்த்திருக்கிறோம்,” என்று ராயல்ஸ் ஸ்போர்ட்ஸ் க்ரூப் தலைமை செயல் அதிகாரி ஜேக் லஷ் மெக்ரம் தெரிவித்தார்.