Cricket
LSG-இல் ரோகித் சர்மாவுக்கு ₹50 கோடி.. அணி உரிமையாளர் சொன்னது என்ன?
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 ஏலம் மிகப்பெரிய அளவில் நடைபெற இருக்கிறது. ஐபிஎல் மெகா ஏலம் என்பதால், இது ஒவ்வொரு அணியிலும் பெருமளவு மாற்றங்களை ஏற்படுத்தும். இந்த முறை ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம் என்பது பற்றி இதுவரை எவ்வித தெளிவான முடிவும் வெளியாகவில்லை.
எனினும், மும்பை இந்தியன்ஸ் அணியை சுற்றி ஏராளமான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்த அணியில் தற்போதைய இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், கடந்த டி20 உலகக் கோப்பையை வென்ற கேப்டன் ரோகித் சர்மா, மும்பை அணிக்கு கடந்த சீசனில் கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா, மூத்த பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் மும்பை இந்தியன்ஸ் அணியில் உள்ளனர்.
இதில் எத்தனை வீரர்களை மும்பை அணி அடுத்த சீசனுக்கு தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எனினும், மெகா ஏலத்தில் ரோகித் சர்மாவை தங்களது அணியில் வாங்குவதற்கு பல அணிகள் போட்டியிடுவதாக தெரிகிறது. இது குறித்து தற்போது வெளியாகி இருக்கும் தகவலில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ரோகித் சர்மாவை ரூ. 50 கோடி கொடுத்து ஏலத்தில் எடுக்க தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.
இது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி உரிமையாளர் சஞ்சிவ் கோயங்கா, “எனக்கு ஒன்பறை மட்டும் சொல்லுங்கள், ரோகித் சர்மா ஏலத்திற்கு வருகிறாரா, இல்லையா? இந்த தகவல்கள் அனைத்தும் எவ்வித காரணமும் இன்றி கூறப்படுகின்றன. மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித் சர்மாவை விடுவிக்குமா? அவர் ஏலத்திற்கு வருவாரா என்பது தெளிவற்ற நிலையில்தான் உள்ளது.”
“ஒருவேளை அவர் ஏலத்திற்கு வரும் பட்சத்தில் அணியின் 50 சதவீத சம்பளத்தை ஒரு வீரருக்கு எப்படி கொடுக்க முடியும். அவர் தவிர மேலும் 22 வீரர்கள் உள்ளனர். ஒவ்வொரு அணிக்கும் ஒரு விருப்பப்பட்டியல் இருக்கும். உங்களகுக்கு சிறந்த வீரர், சிறப்பான கேப்டன் உங்கள் அணியில் இருக்க வேண்டும். ஆனால், ஆசையை தாண்டி, உங்களிடம் என்ன இருக்கிறது என்பதையும் பார்க்க வேண்டும்.”
“உங்களிடம் இருப்பதை வைத்து என்ன செய்ய முடியும். அது தான் விஷயமே. எனக்கு யார் வேண்டுமானாலும் தேவைப்படலாம். ஆனால் அதே விஷயம் எல்லா அணிகளுக்குமே இருக்கும். உங்களுக்கு எல்லாமே கிடைத்துவிடாது,” என்று தெரிவித்தார்.