Cricket
ஒருவழியா நல்ல பிட்ச் கிடைச்சிருச்சு… தென்னாப்பிரிக்காவின் நிம்மதி!
டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் அமெரிக்க அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா.
ஆன்டிகுவா நார்த் சவுண்ட் மைதானத்தில் நடந்த போட்டியில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணிக்கு தொடக்க வீரர் குவிண்டின் டிகாக் சிறப்பான தொடக்கம் கொடுத்தார். அவர் 40 பந்துகளில் 74 ரன்கள் அடிக்க, இந்த உலகக் கோப்பையில் அதிகபட்ச ஸ்கோரை 13-வது ஓவரிலேயே தாண்டியது தென்னாப்பிரிக்கா. அவரும் கேப்டன் மார்க்ரமும் இணைந்து 110 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்து பெரிய ஸ்கோருக்கு அடித்தளமிட்டனர்.
இடையில், 17 பந்துகளில் 15 ரன்கள் எடுத்த இடைவெளியில் 3 விக்கெட்டுகளை இழக்க தென்னாப்பிரிக்காவின் ரன் ரேட் மட்டுப்பட்டது. 20 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா 4 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் அடித்தது. நார்த் சவுண்ட் மைதானத்தில் நடைபெற்றுள்ள 18 டி20 சர்வதேச போட்டிகளில் இதுவே அதிகபட்ச ஸ்கோராகும்.
195 ரன்கள் இமாயல இலக்குடன் களமிறங்கிய அமெரிக்க அணிக்கு டெய்லர் – கவுஸ் ஜோடி சிறப்பான தொடக்கம் கொடுத்தது. டெய்லர் 14 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்துவந்த நிதிஷ், ஆரோன் ஜோன்ஸ், கோரி ஆண்டர்சன் ஆகியோர் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தொடக்க வீரர் கவுஸ், நோர்க்கியா வீசிய 15-வது ஓவரில் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என நம்பிக்கை அளித்தார்.
அதேபோல், ஷம்ஸி வீசிய 19-வது ஓவரில் 3 சிக்ஸர்கள் வாயிலாக 22 ரன்கள் கிடைத்தாலும், அமெரிக்க அணியின் வெற்றிக்கு அது போதுமானதாக இல்லை. இறுதியில் தென்னாப்பிரிக்க அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. தொடர்ச்சியாக 5 போட்டிகளில் வென்று தென்னாப்பிரிக்கா, கடந்த 2019 டி20 உலகக் கோப்பையில் செய்த சாதனையை சமன் செய்திருக்கிறது.