“இது நடக்கும்னு எனக்கு அப்பவே தெரியும்” ஆர்.சி.பி. பற்றி விஜய் மல்லையா சொன்னது என்ன?

ஐ.பி.எல். 2025 தொடரில் ஆர்.சி.பி. அணி கோப்பையை வென்று அனைவருக்கும் பேரதிர்ச்சியும் பெரும் மகிழ்ச்சியையும் கொடுத்தது. எனினும், வெற்றிக் கொண்டாட்டத்தில் ஆர்.சி.பி. அணியும், கர்நாடக அரசும் கவனக்குறைவாக செயல்பட்டதால் 11 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். 11 பேரின் உயிரிழப்பு பெரும் வருத்தத்தை ஏற்படுத்த, அதே அளவுக்கு கண்டனங்களையும் குவித்து வருகிறது.

இந்த நிலையில், 2008-ம் ஆண்டு ஆர்.சி.பி. அணியின் நிறுவனரான விஜய் மல்லையா ஆர்.சி.பி. வெற்றி மற்றும் அதன்பிறகு அரங்கேறிய துயர சம்பவம் பற்றி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசியதாவது..,

“ஆர்.சி.பி. அணி இந்த சீசன் முழுக்க சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்துள்ளது. ஒவ்வொரு போட்டியிலும் ஆர்.சி.பி. அணி வெற்றி பெற்றது மைல்கல்லாக இருந்தது. இது ஐ.பி.எல். சாதனையாக இருக்கும் என்றும் நினைக்கிறேன். சின்னசாமி மைதானத்தில் ஆர்.சி.பி. விளையாடிய ஒவ்வொரு போட்டியும் எனக்கு படபடப்பாகவே இருக்கும்.”

“அந்த வகையில், இந்த முறை ஆர்.சி.பி. இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது எனக்கு ஆச்சரியமாக இல்லை. ஆர்.சி.பி. அணி கோப்பையை வெல்லும் வகையில் எல்லா வகையிலும் பலம் கொண்டிருந்தது. பஞ்சாப் அணியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. எனினும், இறுதிப் போட்டியில் இளம் வீரர்கள் அடங்கிய பஞ்சாப் அணி, அனுபவம் மிக்க வீரர்கள் அடங்கிய ஆர்.சி.பி.யிடம் தோல்வியை தழுவ வேண்டியிருந்தது.”

“இறுதிப் போட்டி வெற்றிக்கு பின் என் நண்பர்கள் சிலரோடு நான் கொண்டாடி மகிழ்ந்தேன். ஆர்.சி.பி. கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கனவு இருந்தது. ஆனால், அதற்கு 18 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்று நினைத்திருக்கவில்லை. தற்போது கோப்பை பெங்களூருவில் இருக்கிறது.”

“ஆர்.சி.பி. வெற்றிக் கொண்டாட்டத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டது மிகவும் சோகத்தை ஏற்படுத்தியது. மிகவும் மகிழ்ச்சியான இடத்திற்கு வந்துவர்களுக்கு ஏற்பட்ட நிலையை எண்ணி நெஞ்சம் உடைந்தது. உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

Leave a Comment