சுப்மன் கில்-ஐ விடுங்க, கம்பீர் தான் பதில் சொல்ல வேண்டும்… கிழித்தெடுத்த முன்னாள் வீரர்..!

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பேற்றதில் இருந்து இந்திய அணி மேலும் உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. டி20, ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி தலைசிறந்து விளங்குகிறது என்ற போதிலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி செயல்பாடு கவலை அளிக்கும் வகையில் தான் இருக்கிறது. தொடர்ச்சியாக மோசமான ஆட்டம் காரணமாக கம்பீர் மீதான அழுத்தம் அதிகரித்து வருகிறது.

நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் தோல்வியை தழுவிய பிறகு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த நிலையில், அனைவரும் எதிர்பார்க்கும் வகையில் அணியை எடுத்துச் செல்லும் கட்டாயத்தில் கவுதம் கம்பீர் இருக்கிறார். இது நடக்காத பட்சத்தில் அவர் மீது அழுத்தம் மேலும் அதிகரிக்கும் என்று இந்திய அணி முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்தார்.

விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்த நிலையில், சுப்மன் கில் தலைமையில் புதிய அணி இங்கிலாந்தில் களமிறங்கியது. எனினும், இந்தத் தொடர் இந்திய அணிக்கு மோசான தொடக்கமாக அமைந்துள்ளது. இந்த விஷயத்தில் புதிதாக கேப்டன்சி பொறுப்பேற்றுள்ள சுப்மன் கில் மீது அதிகம் குற்றஞ்சாட்ட முடியாது என்று ஆகாஷ் சோப்ரா நம்புகிறார். ஆனால், கவுதம் கம்பீரிடம் அதிக கேள்விகள் கேட்கப்பட வேண்டும்.

“இதுதான் இந்திய அணியின் வழக்கம், எல்லாம் நன்றாக செல்லும் போது அனைவரும் அதைப்பற்றி பெருமை கொள்ளலாம். ஆனால், நிலைமை மோசமாகும் போது, குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டே ஆக வேண்டும். சுப்மன் கில் விஷயத்தில் நான் இன்னமும் அமைதியாகவே இருப்பேன். அவர் தற்போது தான் கேப்டனாகி இருக்கிறார். அவர் புரிந்து கொள்ள மேலும் சில காலம் ஆகும்,” என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்தார்.

Leave a Comment