Connect with us

latest news

ஆல் இந்தியா பெர்மிட் வண்டிகளுக்கு தடை கூடாது – தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

Published

on

ஆல் இந்தியா பெர்மிட்டுடன் இயக்கப்படும் வெளிமாநிலப் பதிவெண் கொண்ட பேருந்துகளை இயக்கத் தமிழ்நாடு அரசு தடை விதிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகளுக்கு இணையாக தனியார் ஆம்னி பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. விழாக் காலங்களில் கூடுதல் விலையில் டிக்கெட் விற்பதாக அவ்வப்போது புகாரும் எழுந்து அடங்குவதுண்டு. அதேநேரம், தமிழகத்தில் தமிழ்நாடு பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளைத்தான் இயக்க வேண்டும் என்று போக்குவரத்துத் துறை பல ஆண்டுகளாக ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தி வருகிறது.

ஆனால், அண்டை மாநிலங்களான புதுச்சேரி, கேரளா, கர்நாடகா தொடங்கி நாகாலாந்து, அசாம் மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட ஆம்னி பேருந்துகள் கணிசமாக தமிழ்நாட்டில் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், அரசுக்கு பல கோடி ரூபாய் வரி வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது.

வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை தமிழ்நாட்டில் பதிவு செய்ய போக்குவரத்து ஆணையரகம் 6 மாதங்கள் கால அவகாசம் அளித்திருந்தது. இதேபோல், மூன்று முறை அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில், கூடுதல் அவகாசம் கேட்ட ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் கோரிக்கையை தமிழ்நாடு அரசு நிராகரித்தது. இதனால், தமிழ்நாட்டில் வெளிமாநிலப் பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை இயக்கத் தடை விதிக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசின் இந்த முடிவை எதிர்த்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசின் இந்த முடிவால் ஆல் இந்தியா பெர்மிட் வைத்திருக்கும் வெளிமாநில பேருந்து உரிமையாளர்களும் பாதிக்கப்படுவதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

இதைக் குறித்துக் கொண்ட உச்ச நீதிமன்றம், ஆல் இந்தியா பெர்மிட் வைத்திருக்கும் வெளிமாநில பேருந்துகள் இயங்கத் தடை விதிக்கக் கூடாது என தமிழ்நாடு அரசுக்கு இடைக்கால உத்தரவிட்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் உரிய பதிலளிக்கும்படியும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க: சட்டசபையில் தொடர் அமளி!.. கூட்டத்தொடர் முழுவதும் அதிமுக எம்.எல்.ஏக்கள் இடைநீக்கம்…

google news