latest news
சாரயக்கடைய மூடுங்க சார்!.. எடப்பாடி பழனிச்சாமியின் காலில் விழுந்து கதறிய பெண்கள்…
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தை சேர்ந்த பலரும் கள்ளச்சாரயம் குடித்து உயிரிழந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கருணாபுரத்தை சேர்ந்த பலரும் அப்பகுதியில் பாக்கெட் 60 ரூபாய்க்கு கிடைக்கும் கள்ளச்சாராயத்தை குடித்துள்ளனர். புதன் கிழமை நள்ளிரவில் அவர்களில் பலருக்கும் வயிற்று வலி, வாந்தி, மயக்கம் ஆகியவை ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். முதலில் 3 பேர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தனர். பலரும் கவலைக்கிடமாக இருந்தனர். பாதிக்கப்பட்ட சிலர் திருவண்ணாமலைக்கும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர்.
ஜிப்மர் மருத்துவமனையில் சிலர் உயிரிழக்க பலி எண்ணிக்கை அதிகரித்துகொண்டே போனது. இதுவரை 39 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 10 பேருக்கு கண் பார்வை இழந்திருக்கிறார்கள். 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. இறந்துபோனவர்களில் பெரும்பலானோர் கருணாபுரம் பகுதியில் வசிப்பவர்கள் என்பதால் அந்த பகுதியில் தெருக்கு 2 பிணங்கள் கிடைக்கிறது. கருணாபுரம் பகுதி முழுவதும் மக்களின் அழுகுரல் கேட்கிறது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த ஆறுதல் சொல்ல தமிழக முன்னாள் முதல்வரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கருணாபுரம் பகுதிக்கு சென்றார். அப்போது ‘ஐயா எங்களுக்கு இலவச அரிசி கூட வேண்டாம். சாராயக்கடைகளை மூட சொல்லுங்க’ என்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் அவரின் காலில் விழுந்து கோரிக்கை வைத்தனர். இதைக்கேட்டு கண்கள் கலங்கியபடியே சென்றார் பழனிச்சாமி.
அதன்பின் செய்தியாளர்ர்களிடம் பேசிய பழனிச்சாமி ‘இதற்கு திமுக அரசின் அலட்சியம்தான் காரணம். இதில், சம்பந்தப்பட்டவர்கள் திமுக கட்சியை சேர்ந்தவர்கள். இதற்கு பொறுப்பேற்று மு.க.ஸ்டாலின் முதல்வர் பதவியிலிருந்து விலக வேண்டும்’ என கூறினார்.