latest news
தொழிலாளர்களுக்கு இறுதி கெடு… மாஞ்சோலையில் என்ன நடக்கிறது?
manjolai: மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள், தங்கள் வீடுகளை காலி செய்ய இறுதி கெடு விதித்து பிபிடிசி நிறுவனம் நான்காவது நோட்டீஸை வழங்கியிருக்கிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு மற்றும் ஊத்து ஆகிய நான்கு தேயிலைத் தோட்டங்களை பிபிடிசி நிறுவனம் 99 ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு எடுத்திருந்தது. இந்தத் தேயிலைத் தோட்டங்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளையும் சார்ந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கியிருந்து பணிபுரிந்து வருகிறார்கள்.
பிபிடிசி நிறுவனத்தின் குத்தகை காலம் வரும் 2028ம் ஆண்டோடு முடிவடைகிறது. இதனால், ஒப்பந்தத்தை முடித்துக் கொள்ளும் வகையில், தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்கும் வகையிலான 3 நோட்டீஸ்களை அந்த நிறுவனம் ஏற்கனவே வழங்கியிருந்தது.
இந்தநிலையில், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் நிறுவனம் சார்பில் கொடுக்கப்பட்டிருந்த குடியிருப்புகளை காலி செய்து கொடுக்கும்படியிலான நான்காவது நோட்டீஸையும் பிபிடிசி நிறுவனம் வழங்கியிருக்கிறது. அந்த நோட்டீஸில் விருப்ப ஓய்வு மனுவை சமர்ப்பிக்க ஜூன் 15-ம் தேதி கடைசி நாள் என்றும் அந்த நாளில் இருந்து தொழிலாளர்கள் தங்கள் பணியில் இருந்து விடுவிக்கப்படும் நாளாகவும் கணக்கில் கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதேபோல், விருப்ப மனுவை சமர்ப்பிக்கிற நாளில் 25% கருணைத் தொகையும், அந்த நாளில் இருந்து 45 நாட்களுக்குள்ளாக, அதாவது ஆகஸ்ட் 7-ம் தேதிக்குள்ளாக குடியிருப்புகள் மற்றும் பணிக்காக அளிக்கப்பட்டிருந்த உபகரணங்கள் ஆகியவற்றைத் திரும்ப அளிக்கும் நிலையில் மீதமிருக்கும் 75% கருணைத் தொகையும் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. இதன்மூலம், தங்களை விரைவாக தேயிலைத் தோட்டங்களில் இருந்து வெளியேற்ற பிபிடிசி நிறுவனம் முயற்சிப்பதாகத் தொழிலாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.