india
போலி கடத்தல் நாடகம்… தம்பியிடம் ஒரு கோடி பறிக்கத் திட்டமிட்ட அக்கா சிக்கியது எப்படி?
ரௌடிகள் தன்னைக் கடத்தியதாக நாடகமாடி சொந்த தம்பியிடம் ஒரு கோடி ரூபாய் பறிக்கத் திட்டமிட்ட அக்காவை வாட்ஸப் லிங்க் உதவியோடு போலீஸார் சுற்றி வளைத்தனர்.
ஒடிசா மாநிலம் புவனேஷ்வரைச் சேர்ந்தவர் 35 வயதான ஸ்மிருதி ரேகா பானி. இவரது உடன்பிறந்த சகோதரர் சுபாஷிஸ். அவரிடம் இருந்து பணம் பறிக்கத் திட்டமிட்ட ஸ்மிருதி, கடத்தல் நாடகம் ஒன்றை நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்.
கடத்தல் நாடகம் உண்மையாக இருக்க வேண்டும் என்று திட்டமிட்ட அவர், பிரதீப்குமார் ஓலா மற்றும் தேவி என இருவரின் உதவியை நாடியிருக்கிறார். மேலும், பிரபல ரௌடியான லாரன்ஸ் பீஷ்னோய் குழுவினர் தன்னைக் கடத்தியதாகக் கூறி சுபாஷிஸிடமிருந்து ஒரு கோடி ரூபாய் பெற திட்டமிட்டிருக்கிறார்கள்.
இதன்படி, கடந்த 19-ம் தேதி நயார்க் பகுதிக்குச் சென்ற ஸ்மிருதி பிரதீப் மற்றும் தேவியை சந்தித்திருக்கிறார். போலீஸுக்கு சந்தேகம் வரக் கூடாது என்பதற்காக ஸ்மிருதியின் செல்போனில் இருந்து சிம்கார்டை அகற்றியிருக்கிறார்கள். அதன்பின்னர், ஸ்மிருதியின் வாட்ஸ் அப் மூலம் சுபாஷிஸுக்கு போன் செய்த அவர்கள், தங்கள் சகோதரியைக் கடத்தியிருப்பதாகவும் ஒரு கோடி ரூபாய் பிணைத் தொகையும் கேட்டிருக்கிறார்கள்.
இதுகுறித்து சுபாஷிஸ் போலீஸில் புகார் அளிக்க சைபர் கிரைம் உதவியோடு விசாரணை தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் இது கடத்தல் நாடகமாக இருக்கலாம் என்கிற சந்தேகம் போலீஸுக்கு ஏற்படவில்லை. ஆனால், கடத்தப்பட்ட ஸ்மிருதியின் போன் ரெக்கார்டுகளை ஆய்வு செய்தபோது, பிரதீப் என்பவருக்குக் கடந்த சில மாதங்களாக அடிக்கடி பேசியிருப்பது தெரியவருகிறது.
மேலும், பிரதீப் மற்றும் ஸ்மிருதி ஆகிய இருவரின் செல்போன்களும் ஒரே லொகேஷனில் இருந்து ஆஃப் ஆகியிருப்பதும் போலீஸுக்கு சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. இதையடுத்து சுபாஷிஸ் மூலம் ரூ.12 லட்சம் பணத்தைக் கடத்தல்காரர்கள் சொன்ன கணக்குக்கு மாற்றிய போலீஸ், அதுகுறித்து வாட்ஸ் அப் மூலம் ஸ்மிருதியின் எண்ணுக்கு மெசேஜூம் அனுப்பியிருக்கிறார்கள்.
அந்த வாட்ஸ் அப் மெசேஜில் லொகேஷனை கண்டுபிடிக்கும் மாஸ்க் செய்யப்பட்ட லிங்க் ஒன்றையும் சைபர் கிரைம் போலீஸார் மறைத்து அனுப்பியிருக்கிறார்கள். போலீஸின் இந்த உத்தி சரியாக வேலை செய்யவே, மெசேஜை பிரதீப் குமார் கிளிக் செய்யவும் அவர்கள் பதுங்கியிருந்த இடத்தை போலீஸ் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவர்களை சுற்றிவளைத்த போலீஸார் கைது செய்து போலி கடத்தல் நாடகத்தை அம்பலப்படுத்தினர்.