india
இது புதுரகமால்ல இருக்கு – ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்களில் மோசடி… தம்பதியின் பலே ட்ரிக்!
டெல்லி மற்றும் குர்கான் பகுதியில் உள்ள பல்வேறு 5 நட்சத்திர ஹோட்டல்களில் மோசடி செய்யும் ஒரு தம்பதி குறித்த தகவல் சமூக வலைதளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து உதித் பண்டாரி என்கிற ட்விட்டர் பயனாளர் பகிர்ந்துள்ள தகவல் இதுதான். `குர்கானில் நண்பர் ஒருவரின் வீட்டு பார்ட்டி ஒன்றில் மத்தியதர வயதுள்ள ஒரு தம்பதியினரை சந்தித்தேன். அவர்களிடம் பேசிக்கொண்டிருக்கும்போது ஒரு அதிர்ச்சியான விஷயத்தை ரொம்ப ஆர்வமாக பகிர்ந்தார்கள்.
டெல்லி – குர்கானில் இருக்கும் 5 நட்சத்திர ஹோட்டல்களில் அடிக்கடி சாப்பிடும் வழக்கம் கொண்டவர்களாம் அவர்கள். ஆனால், அந்த ஹோட்டல்களுக்குச் செல்லும்போது உயிரற்ற பூச்சியைக் கையோடு எடுத்துச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்கள். சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே, கொஞ்ச நேரத்தில் உணவில் அந்த பூச்சியை வைத்துவிட்டு உணவில் பூச்சி கிடப்பதாக பிரச்னையைக் கிளப்புவார்களாம்.
இதனால், பெரும்பாலான ஹோட்டல்களில் அவர்கள் சாப்பிட்ட உணவுக்குப் பணம் கொடுக்காமல் வெளியேறவும் முடியும் என்று சொல்கிறார்கள். அவர்களைப் பார்த்தால் பண கஷ்டம் இருப்பவர்கள் போல் தெரியவில்லை. ஆனால், விளையாட்டுக்காக இதை செய்வதாக பெருமையாகச் சொல்லிக் கொள்கிறார்கள். இந்த ட்ரிக்கைப் பயன்படுத்தி பல நட்சத்திர ஹோட்டல்களில் இலவசமாக உணவு உண்டதாகவும் சொல்கிறார்கள்’ என்று பகிர்ந்திருக்கிறார்.
இது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. `இப்படியெல்லாம் மனிதர்கள் நிஜத்தில் இருப்பார்களா?’ என்று ஒருவர் கமெண்ட் செய்திருக்கிறார். மற்றொருவரோ தனது சகோதரரின் அனுபவத்தைப் பகிர்ந்திருக்கிறார். `என்னுடைய சகோதரரர் பிரபலமான மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் பணியாற்றுகிறார்.
அங்கு வரும் சிலர் பர்கர், ஃப்ரைஸ் எல்லாம் ஆர்டர் செய்துவிட்டு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே, திடீரென பிரெட், காய்கறிகள் எல்லாம் சரியில்லை என புகார் தெரிவித்து சத்தமிடுவார்களாம். மெக்டொனால்ட்ஸ் நிறுவன கொள்கையின்படி அவர்களுக்கு அந்த குறிப்பிட்ட உணவுக்குப் பதில் வேறு உணவு வகைகளோ அல்லது கூடுதலாக சில சலுகைகளோ கொடுக்கப்படும். இது வாடிக்கையாக நடக்கும் விஷயம்தான்’ என்று பகிர்ந்திருக்கிறார்.